ணேசனார் காலத்தை வென்று வாழ்வார்!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா





தன்மன வானத்துக் கவிமழை அமுதத்தைத்
         தமிழ்நிலம் பருக வென்றே
'என்மன வானிலே' என்னும்பொற் கலசத்தில்
         எடுத்துநல் விருந்து தந்தார்
கன்மனம் கரைந்திடும் கனிச்சுவை பிறந்திடும்
         கணேசனார் கவிதை தந்தால்
பொன்மனம் கொண்டவர்தம் பூவுடல் மறையினும்
          புகழுடல் நிலைத்து வாழும்!

('என்மன வானிலே' சென்ற ஆண்டு வெளிவந்த இவரது கவிதை நூல்)


மூத்தநல் லறிஞர்பால் முறையாக யாப்பினை
         முனைப்போடு கற்ற கவிஞர்
யாத்ததம் பாவோடு யாப்பெனும் தேரேறி
         யாத்திரை செய்த புலவர்!
பூத்தபுன் நகையோடு புலமையை அரங்கிலே
         புலப்படத் தந்த கலைஞர்!
காத்திரம் கொண்டதவர் கவிதைகள், அதனாலே
         காலத்தை வென்று வாழ்வார்!


பத்தோடு பதினொன்றாய்ப் பயனற்றுப் போகின்ற
         பயணத்தில் பெருமை யில்லை!
சத்தான வாழ்க்கையால் சாதனை செய்தாரைச்
         சமுதாயம் மறப்ப தில்லை!
இத்தரை மீதிலே அர்த்தமாய் வாழ்வோர்க்கு
         இறப்பென்ப தென்று மில்லை!
அத்தகை வாழ்ந்தவர் அச்சுவே லிக்காரர்
         அவருக்கு மரண மில்லை!

குச்சுவே லிக்குளே குதிரையை யோட்டியே
        கொடிதூக்கிக் கொள்ளு முலகில்,
பச்சைவே லிக்குள்ளே பசுமையாய்ப் பாக்களைப்
        படரவே விட்ட கவிஞர்!
உச்சவே லிக்குள்ளே உயர்வான பண்போடு
        உண்மையாய் வாழ்ந்த மனிதர்!
அச்சுவே லிக்கென்றே அடையாள மானவர்
        அமரருள் அமைதி பெறுக!
    


      

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா


 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்