பாடி முழங்கிடுவார் பண்!

கவிதாயினி பவானி தர்மகுலசிங்கம்

 

 

(அண்மையில் அமரத்துவமடைந்த கவிஞர் அச்சுவேலி கணேசன் அவர்களுக்கான பாடல்.)

 

அச்சுவேலி தன்னிலே ஆளுமை மிக்கோனாய்க்

கச்சிதமாய்ப் பாடும் கவிஞனிவர் - பிச்சன்

பெருமான்தன் சீரடியில் பேறடைய எண்ணித்

திருவுளம் கொண்டாரே,  தேற்று!

பிச்சன்-சிவன்

 

பண்புடனே இங்கிதமாய்ப் பாசம்கொள் மானிடனாய்

வண்மையுடன் மண்ணுலகில் வாழ்ந்தாராம் - கண்ணியமாய்ச்

சார்ந்தோர் புகழுரைத்தார், சாற்றினார் மேன்மைபல

ஓர்ந்துருகி நின்றார் உளம்!

 

முக்கனிச் சாறாய் முனைந்து பலகவிகள்

இக்கவிஞ னாக்கியே இன்புற்றார் - எக்கணமும்

எத்தலைப்பை யேற்றும் இனியநற் பாடல்கள்

முத்தனையத் தந்தாரே முன்பு!

 

மரபுக் கவிஞனெனும் மாண்புறுபேர் தாங்கிச்

சிரம்தனிற் கொண்டார்நற் சீர்கள் - முரசறை

பாடல்கள் கீதவாணிப் பல்கலை வானலையில்

பாடி முழங்கிடுவார்   பண்!

 

கனடாக் கவிஞர் கழகத்தைச் சார்ந்து

இனமானப் பாக்க ளியற்றிக் - கனம்மிகு

பாட  லரங்கினிற்  பாவிசைத்துப் பாடிடக்

கூடவரும் கொட்டும் குரல்!

 

தான்பிறந்த தண்சேர் தலத்திலமர் பேர்பெற்ற

ஆன்ற கிறிஸ்தவ ஆலெனத் - தோன்றுபுகழ்

கல்லூரி தன்னிலே கால்பதித்துக் கற்றுமே

நல்லபணி யாற்றினார் நட்பு!  

 

பண்பான மாணவர்தம் பாங்குறு சங்கத்தின்

திண்மையா லோசனைத் திவ்வியனாய் -  வண்மைமிகு

நூற்றிருபத் தைந்தாண்டு நூலுக்காய் ஓய்வின்(றி)

ஆற்றினார் நற்சேவை யன்று!  

 

ஆண்டவன் பாதத்தில் ஆழ்துயிலில் ஆழ்ந்தவரே

மீண்டும் பிறந்திடுவீர் மேதினியில் - கேண்மைமிகு

மாந்தரெலாம் வேண்டினார் மாநிலத்தில் நும்வரவை

தீந்தமிழ்ப் பாவில் தெவிட்டு!

                       

 
கவிதாயினி பவானி தர்மகுலசிங்கம்




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்