கன்னித் தமிழின் களம்!

கவிஞர் கே.பி.பத்மநாபன்

வள்ளுவரின் வாள்வீச்சும் வான்கம்பன் வேல்வீச்சும்

துள்ளுமிளங் கோவடிகள் தோள்வீச்சும்- தெள்ளறிவு

மின்னிடும் தேர்கவிஞர் மிக்குயர்ந்த சொல்வீச்சும்

கன்னித் தமிழின் களம்.
 

பாரதியின் நேர்வீச்சும் பாவேந்தர் போர்வீச்சும்

வீரமுடைப் பட்டுக்கோட் டைவீச்சும்- ஈரமுடன்

இன்னிசையாய்ப் பொங்கிய எம்கண்ண தாசவீச்சும்

கன்னித் தமிழின் களம்.

 

மரபுக் கவிவீச்சும் மற்றுபுது வீச்சும்

உரத்த பலவீச்சும் ஓங்கிக்- குரலெழுப்பித்

தன்னிலையைத் தக்கவைக்கும் தாழாத் தலைவீச்சும்

கன்னித் தமிழின் களம்.

     
 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்