என்றன் குருவே  வாழ்க

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

தாயாக  அன்புகாட்டித்  தந்தை  யாகத்

          தட்டியெனை  வளர்த்திட்ட  குருவே  வாழ்க

நாயாக  நான்மாறிக்  குரைத்தி  டாமல்

          நற்பண்பை  எனில்விதைத்த  குருவே  வாழ்க

பேயாக  நானலைந்து  திரிந்தி  டாமல்

          பெருமையுற  வழிவகுத்த   குருவே  வாழ்க

தூயமன  ஒழுக்கத்தை   அறிவை   ஊட்டித்

          துயர்வெல்லும்   உறுதிதந்த  குருவே  வாழ்க !

 

பள்ளிதன்னில்  நான்நுழையும்  போது   நல்ல

          படம்வரையும்   ஓவியஆ  சிரிய  ராக

பள்ளிவிட்டு  வெளியேறும்  போது   நன்றாய்ப்

          பாடத்தைக்  கற்பிக்கும்   ஆசா  னாக

வெள்ளத்தை   அடக்குகின்ற  கரையாய்  நின்று

          வெளியுலகப்   பொதுவறிவைப்   பாடத்  தோடே

அள்ளியள்ளி  எனக்களித்தே   என்வாழ்  விற்கே

          அடித்தளத்தை   அமைத்திட்ட  குருவே  வாழ்க !

 

திருக்குறளின்  வகுப்புதனை   வாரந்  தோறும்

          திருக்கோயில்   தனில்நடத்தி   என்றன்  நெஞ்சுள்

அருங்குறளின்  மீதுபற்றை  வளர  வைத்தே

          அதில்தோய்ந்து  தமிழ்படிக்கும்  ஆர்வ  மோங்க

அருந்தமிழின்   சுவையறியக்   காப்பி  யங்கள்

          ஆழ்ந்தறியப்  புலவரெனும்  கல்வி  கற்கக்

கருவாகத்   திகழ்ந்தென்னைத்   தமிழா  சானாய்க்

          கற்பிக்க   எனைவளர்த்த   குருவே  வாழ்க ! 

                              ( 1 )

குடிசையெனும்  தம்வீட்டில்  இடம  ளித்துக்

          குளிர்ந்தநிழல்  மரம்சூழ்ந்த  தோப்பிற்  குள்ளே

படிப்படியாய்  நான்படித்து  வளர்வ  தற்குப்

          பக்கத்தில்  அமர்ந்துநாளும்  தூண்டி  விட்டே

அடிமனத்துள்  புதைந்திருந்த  கவிதை  தன்னை

          அகழ்ந்தெடுத்து  வைரத்தைத்  தீட்டல்  போன்று

வடித்தெடுத்துக்  கவிஞனாக  என்னை  ஏற்றி

          வான்புகழைப்  பெறவைத்த  குருவே   வாழ்க !

 

கண்ணாடி  போல்வரையும்  கலைஞன்;  கண்ணால்

          கண்டதினை  ஓவியத்தில்   காண  வைப்போன்

மண்மீதில்  இருக்கின்ற  கோயி  லெல்லாம்

          மறைந்தாலும்  இவர்படத்தில்  நிலைத்தி  ருக்கும்

கண்டயிவர்  ஓவியத்தில்  மனம்ம  யங்கிக்

          காண்பதற்குக்  கென்னடியால்   அழைக்கப்  பெற்றோன்

எண்ணத்தைக்  காட்டுகின்ற  மனத்தைப்  போல

          எழிபடத்தில்  காணவைக்கும்  குருவே  வாழ்க !

 

வரலாற்றைக்  கற்பிக்கும்  ஆசா  னாக

          வந்தாலும்  தமிழுக்கே   தன்னை  ஈந்தோன்

கரத்தினிலே  தூரிகைதான்  இருந்த  போதும்

          கண்ணனவன்  குழலுக்கே  நெஞ்சைத்  தந்தோன்

பரமனிடம்  பெற்றகவி  ஆற்ற  லாலே

          பாண்டுரங்க  தேவாநூல்   வடித்த  ளித்தோன்

வரமாக  வந்துதித்த  கருணைக்  கடலே

          வணங்குகின்றேன்  நின்தாளைக்  குருவே  வாழ்க !

 

                                        ( 2 ) 

 

பெயர்விளங்கப்  பிரபஞ்ச  கவிதை   என்னும்

          பெயரினிலே  நூல்தந்தே  உலகைக்  கண்டோன்

உயர்வாழ்வு   இறைவனவன்  அருளி  னாலே

          உருவாகும்  என்கின்ற  தத்து  வத்தை

நயமாக   பிரணவமாம்   பிரவா  கத்தில்

          நறுந்தேனாய்க்  கவிதையிலே  பிழிந்த  தளித்து

மயக்கத்தைத்  தெளிவித்த   ஞான  யோகி

          மனம்மெய்யால்   வணங்குகின்றேன்  குருவே  வாழ்க !

 

விசிறிக்கு   விசிறியாகி   சிவனோ   தீயாய்

          வீற்றிருக்கும்   திருவண்ணா   மலையின்  சித்தர்

பசிக்குணவாய்   ஆன்மீக   உணவ   ளித்த

          பகவான்ராம்  சுரத்குமாரின்   பக்த  னாகப்

புசிப்பதற்கே   ஆனந்தப்  பிரவா  கத்தைப்

          பூந்தேனாய்   அளித்திட்ட  பெருமாள்  ராசே

கசிந்துருகி  நின்தாளைப்  பற்றிக்  கொண்டேன்

          கண்காணும்  இறைநீதான்  குருவே  வாழ்க !







உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்