அந்த நாளும் வந்திடாதோ?

பாரதி, ஜேர்மனி

புகைப்படம் காட்டி உறவுகள் சொல்லி
வரைபடம் தேடி ஈழமண் காட்டி
திரைப்படம் போட்டுக் கரும்புலிக் காவியம் சொல்லி
மனப்பாடம் ஆக்கி மாவீரர் புகழ் பாடி
தாய்மண்ணின் உறவுக்காய் பாலம்போட முயல்கின்றேன்
தமிழ்மொழியின் உயர்வுக்காய் கோலமிட முனைகின்றேன்

பாட்டி வீட்டுக்குப் போவோமா? எங்கள் நாட்டுக்குப் போவோமா?
மண்ணின் வாசனை நுகர்ந்து கேட்டிடும் என் மகள்
முகத்தைப்பார்த்துத் தவிக்கின்றேன்.

முடிவு சொல்லத் துடிக்கின்றேன்.
போர்ப்புயல் சூழ்ந்த எம்மண்ணில் அமைதிக்காற்று வீசாதா?
அன்பு உறவுகள் அருகிருந்து ஆனந்த மழையில் சிலிர்க்கின்ற
அந்த நாளும் வந்திடாதா?




scanma2000@t-online.de