பாடுங் குயிலொன்று பறந்துசென்றதே  (இரங்கற்பா)

புலவர் முருகேசு மயில்வாகனன்

சிம்மக் குரலோனே சிங்கார வேலவனே

தம்மையே தானறிந்த தத்துவனே விம்மவைத்தாய்

பாரெங்கும் உள்ளோரைப் பாடிய பாட்டாலே

பேரோடு சென்றாயே பார்.

 

பார்போற்றும் பாலாவே பாரைவிட்டுச் சென்றுவிட்டாய்

சீரோடு வாழ்ந்தே சிறப்புற்றாய் பேரெடுத்தாய்

தேனொத்த சிம்மக் குரலாலே மக்களிடம்

வானுயர்ந்து நின்றாயே வாழ்த்து.

 

செந்தமிழில் தேர்ச்சிபெற்றே செப்பமாம் உச்செரிப்பு

எந்தமொழிப் பாடலையும் ஏறெடுத்தே சொந்தமொழி

போலவே அம்மொழியார் போற்றிடப் பாடிடுவாய்

சீலம் நிறைந்தாய் சிறந்து.

 

சிறுவர் பெரியரெனச் சிந்தையிற் கொள்ளாய்

இறுதிவரை யாரையுமே ஏற்று உறுதிபட

இன்முகங் காட்டி ஏற்றவற்றைச் செய்திடுவாய்

அன்பால் அரவணைப்பாய் ஆம்.

 

பாட்டால் உயர்ந்தவனே பண்பும் அதுவேதன்

கூட்டுப் பொறுப்பால் குதுகலித்தாய் ஈட்டினாய்

செல்வாக்கும் சேர்ந்துகொள்ள சேய்கள் மனையாளும்

ஆல்போல் உயர்த்தினரே ஆம்.

                  


 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்