புத்தாண்டே எழுக புதுயுகம் காணவே

அருட்கவி ஞானகணேசன்

 

எதைத்தந்து செல்கின்றாய் ஈர்பத்தாம் ஆண்டே?

வதைத்துநீ கொன்றனை! மாண்டோர் - புதையுமுன்

கட்டிப் பிடித்துக் கதறி யழுதிடத்தான்

விட்டாயோ கெட்டாண்டே ! வேறு!

 

கொரணா எனும்பெரும் கொல்லியினால் பாரே

மரண பயத்திலே மாண்டு அருவமாய்த்

தொற்றைக் கொடுத்துத் தொலைக்குதே மானிடரை

இற்றைவரை என்னே இழப்பு!

 

இருபத் திருபதில் எத்தனை சாவு

பெருகிடும் கண்ணீரும் பார்த்தோம் - வருவது

மங்கலம் பொங்கும் மகிழ்வுறு ஆண்டாகப்

பொங்கிப் படைத்தோம் பொலிந்து!

 

தொற்றிடும் நோயொடு தொல்லை யகன்று

பற்றி யணைத்துப்; பயமின்றி பற்றுடன்

கட்டிப் பிடித்துக் களிப்பினில் ஆழ்ந்திட

இட்டமொடு வாராய் இனிது!

 

வாயினைக் கட்டி வழியின்றி ஆழ்கிறோம்

தாயினைப் போல தயாபரியே நீயே

புதுயுகம் தந்தெமக்கு பூரித்து வாழ்வை

பதுமையாய்த் தாராய் பரிந்து!

 

                

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்