உழவர்க் குரிய திருநாளை
ஊரே மகிழும் கொண்டாடி!
உழவரைத் தேடிக் கொண்டாட
உலகம் முன்வரல் எந்நாளோ?
உலகின் அச்சாய் விளங்குகிற
உழவன் சிந்தும் வேர்வைகளே.
நலந்தரு நெல்லாய்க் கரும்பாக
நற்கனி பலவாய் உருவாகும்!
உழவன் கணக்குப் பார்த்தாலே
உழக்கும் கூட மிஞ்சாதாம்!
பெய்யினும் காயினும் எப்போதும்
பெரிதும் நட்டம் உழவனுக்கே!
மற்றவர் உண்ண உடுப்பதற்கு
மண்ணில் ஆக்கித் தந்துவிட்டு
மாற்று வேட்டியும் இல்லாமல்
மறைவாய்க் கஞ்சி குடிக்கின்றான்!
உழைப்பால் ஆன பொருட்கெல்லாம்
உரிய விலைகள் கிடைத்தாலே
உழவர் திருநாள் உண்மையிலே
உவகை நல்கிடும் நாளாகும்!
இடையில் தரகர் இல்லாமல்
இனிதே பொருளை விற்பதற்கு
நல்ல திட்டம் உருவாகும்
நாளே உழவர்த் திருநாளாம்!