வெண்பனியில் தைப்பொங்கல்

புலவர் முருகேசு மயில்வாகனன்

இயற்கையோடு இணைந்தவாழ்வு என்றுமே இன்பந்தான்

தயக்கமேன், புலம்பெயர்ந்த தமிழரின் தன்மானம்

மயக்கத்தைத் தந்திட்டாலும் மாற்றத்தை விரும்பமாட்டார்

உயர்ந்தநற் சிந்தையோடு ஊரையும் மறக்கமாட்டார்.

 

எங்குதான் வாழ்ந்தாலும் ஈழத்தின் வாழ்முறையில்

அங்கமாம் பொங்கலை என்றுமே மறக்காது

திங்களது தையினிலே தினகரனே மறைந்தாலும்

பங்கமின்றிப் பொங்கிடுவர் பாசமுடன் குக்கரிலே.

 

முற்றமோ வெண்பனியால் முழுநிறைவு பெற்றாலும்

பற்றிநின்ற பனியினையும் பறிகொடுக்க முடியவில்லை

உற்றதோர் விடுமுறையும் உண்மையிலே இங்கில்லை

கற்கைநெறி, வேலையென்றே காலையிலே சென்றிடுவர்.

 

செந்தமிழர் பண்பாட்டைச் சேய்களும் அறிதற்காய்

முந்தையோர் செய்தவற்றை முன்னெடுத்துப் பிள்ளைகளின்

சிந்தையிலே சேர்ப்பதற்கும் செயல்முறையில் காட்டற்கும்

விந்தையாம் பொங்கலை வீடுவந்தே செய்திடுவர்.

 

காலைக் கதிரவனும் கண்டறியாக் காளைகளும்

மாலையிலே எங்கிருப்பர் மேன்மையுறு பொங்கலன்று

வேலை முடிந்தபின்னர் வீடுவந்த மனையாள்

மாலைப் பொங்கலொன்றை மணியாகச் செய்திடுவாள்.

 

வீட்டினது மண்டபத்தில் விதவிதமாம் அலங்காரம்

ஈட்டுபணி பிள்ளைகளும் ஈர்ப்புடனே சேர்ந்துமே

நாட்டமுடன் ஒன்றுசேர்ந்தே நலமான வாழ்வுக்காய்

கூட்டுப் பொறுப்புடனே குதுகலமாய்ப் பொங்கியபின்

 

சாமி படத்தின்முன் சமைத்தவற்றைப் படைத்தே

தாமத மேதுமின்றித் தப்பிதமும் இன்றியே

தாமறிந்த தேவார திருவாசகம் ஓதுவதே

பாமர மேதுமற்ற பக்குவமாம் பொங்கலிதே.

 

இவ்வாண்டுப் பொங்கல் இனிக்குமென்று நம்பாதீர் 

ஒவ்வாத கொரொனா ஒழிந்தால்தான் பொங்கலென்றால்

கவலைதான் மேலோங்கும் கலாசாரப் பொங்கலிது

அவலத்துக் குள்ளாகும் ஐயமில்லை ஆழ்துயர்தான்.



                   


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்