தைத்திரு நாளிதைப்
போற்றிடுவோம்
கவிஞர் மாவிலி மைந்தன்,
சி.சண்முகராஜா, கனடா
தமிழர்தம் மரபினிற்
தோன்றியதை
– இந்தத்
தாரணி போற்றிட ஓங்கியதை
அமிழ்தின் அருஞ்சுவை ஆகியதை
- மன
ஆழத்திலே உறைந்து ஊறியதை!
சேற்றினிலே ஏரைச் செலுத்தியதை
– வேர்வை
சிந்தியே உழவர்கள் செதுக்கியதை
சோற்றினை யாவர்க்கும் வழங்கியதை
– ஞாலம்
சூழ்ந்த பசிதனை விரட்டியதை!
ஏறு தழுவலை ஏற்றியதை
- பல
ஏற்றம் மிகுசெய லாற்றியதை!
வீறுகொள் வீரத்தைப் போற்றியதை
– புகழ்
விஞ்சும் மரபினைச் சாற்றியதை!
சாதி மதபேதம் நீக்கியதை
– நற்
சமத்துவப் பாதையை ஆக்கியதை!
நீதி நெறிகளைச் சாற்றியதை
– நம்
நெஞ்சுக்குக்; குறள்நெறி சாற்றியதை!
உள்ளத்தில் நம்பிக்கை யூட்டியதை
– எம்
ஒற்றுமைக் கேதிசை காட்டியதை
கள்ள மிலாஅன்பை நாட்டியதை
– இன்பக்
காதலில் மெய்யுற வூட்டியதை!
தைத்திரு நாளிதைப் போற்றிடுவோம் - செந்
தமிழர்தம் மரபினைக் காத்திடுவோம்!
இத்தரைத் துன்பங்கள் போக்கிடுவோம் - ஏழ்மை
இலையெனும் உலகொன்றை ஆக்கிடுவோம்!
பொங்குக பொங்கல் பொலிவுறவே! – துயர்
போகட்டும் ஞாலம் உயர்வுறவே!
மங்கலம் தங்கட்டும் மகிழ்வுறவே - இங்கே
மானிடம் வெல்லட்டும் புகழ்பெறவே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|