தாய்மண்ணின் வாசம்

சக்தி சக்திதாசன்                      

தாய்மண்ணின் வாசம் - நெஞ்சில்
தேனாக ஊறும்
தமிழ் தந்த தேசம் எனைத்
தாலாட்டும் நேரம்

நினைவுகளைத் தாங்கி - நான்
கனவுகளில் ஏங்கி
தாய்நாட்டை நீங்கித் தவித்தேன்
கவலைகளை வாங்கி

கடல் கடந்து வந்தும் - காலம்
கடந்து பல சென்றும்
நிழலாக நெஞ்சில் என்றும்
நிறைந்திருக்கும் பாசம் இன்றும்

கலந்திட்ட கனவுகளில் - இன்னும்
கரைந்திட்ட எண்ணங்கள்
கற்றதும் பெற்றதும் எத்தனை ஆயினும்
காலத்தால் அழியாத மண்நேசம்

பிரிந்து வந்த பொழுதில் - நான்
சுமந்து வந்த பாரம்
முதிர்ந்து விட்ட பொழுதும்
மிதந்திருக்கும் எப்பொழுதும்

உறவு பல கண்டேன் - நானும்
ஊர்கள் பல பார்த்தேன்
உதிரத்தின் பிணைப்பு இன்னும்
உறவாகும் நான் தவழ்ந்த மண்ணில்

என் அன்னை என் தந்தை
அவர் தந்தை அவர் அன்னை
ஆடி மகிழ்ந்திருந்த மண்
அளிக்கும் அமைதிக்கு ஈடேது

எவர் வாழ்க்கை எவ்வழி செல்லும்
எவர் கண்டார் இவ்வுலகில்?
தமிழே ! எந்தன் தாயின் மொழியே
தருவாய் வரமே ! அருள்வாய் எனக்கே !

எத்தனை முறை பிறந்தாலும் நான்
அத்தாய் மடியில் தவழ்ந்திடவும்
அத்தமிழ் மண்னைச் சுவைத்திடவும்
அத்தமிழ் மொழியை
ரசித்திடவும்