கம்பன் கவியே கவி!
மதுரை பாபாராஜ்
வால்மீகி காவியத்தை வண்டமிழர் பண்பாட்டின்
நேர்த்தி குறையாமல் நற்றமிழில் -
தோய்த்தேதான்
இன்றளவும் என்றும் நிலைக்குமாறு தந்துவக்கும்
கம்பன் கவியே கவி.
சடையப்ப வள்ளலின் ஊக்கத்தால் ஆக்கம்
தடையின்றிக் காவியமாய் மாற --
முறையாக
தன்புலமை ஆற்றலை நன்றியுடன் பாடுகின்ற
கம்பன் கவியே கவி.
பெற்றோரின் ஆணை எதுவெனினும் பிள்ளைகள்
தட்டாமல் ஏற்றேதான் கீழ்ப்படியும் --
அற்புதப்
பண்புகளை நெஞ்சில் இழையோட வைத்திருக்கும்
கம்பன் கவியே கவி.
கணவனைச் சுற்றியே வாழ்வில் நடக்கும்
மனைவியின் மாண்புதனைக்
காட்டி --
மனத்திலே
பெண்மையைப் போற்றி வணங்கவைக்கும்
பாங்கிலே
கம்பன் கவியே கவி.
பெண்ணாசை
கொண்டே இராவணன் கூட்டத்தார்
என்னென்ன போர்முறைக்கு வித்திட்டார் --- பொங்கிவந்த
தன்னலக் கூத்துக்கள் தோல்விக்கே மூலமென்ற
கம்பன் கவியே கவி.
ராமன் நினைத்தால் மணித்துளி போதுமே!
பூமணக்கும் சீதையுடன் சேர்ந்திருப்பான் --- ஆனாலும்
மண்ணில் அவதாரம் வெற்றிபெற வைத்திட்ட
கம்பன் கவியே கவி.
ஆற்றல் இருந்தாலும் நன்னெறியை வாழ்விலே
போற்றாமல் வன்முறையில் சென்றுவிட்டால் -- தூற்றுகின்ற
தண்டனை நிச்சயம் என்பதைக் காட்டுகின்ற
கம்பன் கவியே கவி.
அவையடக்கம்,
நட்பு,
எளிமை,
பணிவு
இவையெல்லாம் வாழ்வில் இருந்தால் -- அவனியில்
என்றும் உயர்வுதான் என்றே உணர்த்துகின்ற
கம்பன் கவியே கவி.
காவியப் போக்கின் படைப்புகள் எல்லாமே
சீர்மிகு பின்னலாய் நீக்கமற -- ஆழ்நிலை
அன்பினை உள்ளம் வெளிப்படுத்தத் தூண்டிவிடும்
கம்பன் கவியே கவி.
எண்ணற்ற காவியங்கள் பாரில் இருந்தாலும்
பண்பால்,
தரத்தால்,கவிதைச் செழுமையால்
கம்பன் படைப்பில் நிமிர்ந்துவிட்டான்!
அத்தகைய
கம்பன் கவியே கவி.
spbabaraj@gmail.com
|