அவள் வாழ்க்கை

சமீரா பேகம் - மலேசியா

ஆயிரம் ஆயிரம்
கனவுகள்...கற்பனைகள்
எதிர்பார்ப்புகள்..
அத்தனையும் மனதில் சுமந்து.
மணமேடை ஏறினால் ஒரு மாது..!

மாலை மாற்றி முடியும் முன்பே
தொலைந்து போயினர் பள்ளி தோழிகள்..
மனக்கனவுகள் அத்தனையும்.
ஒவ்வொன்றாய் விடை பெற்றுச் செல்ல.
ஏக்கத்துடன் விடிந்தன பல பொழுதுகள்..!

புத்தம் புதிய உறவுகள்.
நித்தம் நித்தம் வந்து போயின..
அவளுக்காக யாரும் மாறவில்லை..
அவர்களுக்காக
அவள் மாறினால் மாற்றிக்கொண்டால்..

விருப்பமுடன் சில நாள்.!
விருப்பமின்றி பல நாள்..!
கட்டிலில் கட்டிய கணவனை சுமந்தாள்..!
ஆசையுடன் வயிற்றில் குழந்தையை சுமந்தாள்..!

கல்லூரியில் ஆடிய
கால்களுக்கும்..
பாடிய வாய்க்கும்
மௌனத்தை பதிலாக்கினாள்...!
பிடித்த சிலவற்றை மறந்தாள்..!
பிடிக்காத பலவற்றை பயின்றாள்..!

மனதில் நினைத்த வாழ்க்கை ஒன்று..
நிஜத்தில் வாழுகின்ற வாழ்க்கை வேறு.
முடிவு தெரியா பயணத்தில்..
ஓடி ஓடி உழைத்தாள்..
உறக்கத்தைத் தொலைத்தாள்..
பம்பரமாய் சுழன்றாள்..
பறந்தன காலங்கள்...!

நரை விழுந்து..
முகம் தொய்ந்து.
உடல் தளர்ந்து.
முதுமைக் கோலத்தில் அவள்..!

என்ன வாழ்க்கை வாழ்ந்தேன்..
நின்று நிதானிக்கையில்...
அவளுக்காக அவள் வாழவேயில்லை.
என்பதை உணர்கையில்..
நழுவி முடிகின்றது
அவள் வாழ்க்கை...!!!



vtvasmin@gmail.com