நல்ல தோழமை

வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்.

பயில்தொறும் ஓர் உறவாய்
மகிழ்வுறும் நிலை தேவை.
சாதனை பகிர்வது மட்டுமல்ல,
வேதனை பகிர்வதும் உரிமை.

தாராள மதிப்புப் பெற்று
தீராந்தி போற் பலமுடன்
சாராம்சம் நிறைந்து அடுத்தவரை
சீராட்டும் அன்பு இன்பம்.

தோராயம் நிறைய உடைய
ஆராதனைக்குரிய அன்பால்
யாராயினும் நீராட்டப்பட வேண்டும்.
பேராசை தான் இது.

இழிவு அருகிடா ஒரு
பழி நாணும் உறவு
அழித்தலரிது, ஆறுதலுடைத்து.
கழிப்புடன் கருத்துடைத்து.

சொல்லும் செயலும் இணைந்தாரின்
நல்ல தோழமை வெல்லமானது.
சொல்வேறு, செயல் வேறானோருறவு
நல்ல நீரிலே எண்ணையாகும்.


kovaikkavi@gmail.com