நண்பர்களுக்குத் தெரியும்
லறீனா அப்துல் ஹக்
வைரத் துளிகளாய் வானம்
பொழிந்துகொண்டிருந்த வேளை
'அதன்' மரணம்
இன்று காலைதான் நிகழ்ந்தது
புல்நுனி மீதிருந்து உதிரும் - ஒரு
பனித்துளியாய் விடைபெற்றுச் சென்றிருந்தது
அது.
உறவினர்கள் ஒப்புக்குக் கூடிநின்று
விழியொற்றிக் கொண்டார்கள்.
நண்பர்கள் எல்லோரும் போல்
இதயத்தால் விசித்தார்கள்
அழுதழுது உறங்கிவிட்ட
குழந்தையொன்றின் கேவல்போல்
அவ் விசும்பலின் மெல்லொலிகள்
காற்றுப் பெருவெளியில்
கவிதையாய்க் கனன்றன.
அந்த மரணம் வெகுவாய்
எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்
இன்றாவது நிகழ்ந்ததற்காய்
ஆசுவாசப்பட்டார்கள்
இடையிடையே எழுந்துகொண்ட
அனுதாபத்துக்கும் குறைவில்லை.
உயிர்க்குயிராய் நேசித்த
உறவுகளின் துரோகத்தில்
பகைவர்களின் குரோதத்தில்
அதிகாரம், பதவி, மேலாண்மை
இத்யாதி உள்ளோரின்
அடக்குமுறை அரசியலில்
இதுவரை அனுபவித்த
ஆறாப் பெருந்துயரம், அவமானம், இருட்டடிப்பு
இப்படி எல்லாமும் கல்லாய் அழுத்துகையில்
பெரும் புண்ணாய் 'அதன்' வாழ்க்கை
வலிதந்து வலிதந்து வதைப்பட்டதொன்றென்று
நண்பர்கள் தமக்கிடையில் பேசித் தீர்த்தார்கள்.
உதயத்தின் புறப்பாட்டில்
நிகழ்ந்து விட்ட 'அதன்' மரணம்
நிச்சயம் நல்லதென்று
அவர்கள் சொன்னார்கள்.
அன்றைய மரணம் - வெறும்
உடலுக்கு நேர்ந்ததுதான்
நடைபிணமாய் வாழ்ந்த உடல்
நிம்மதியாய்ப் போகட்டும்
ஏற்கெனவே எப்போதோ
உயிர் செத்து, அதைப்புதைத்து
வளர்த்திட்ட க'விதை' இன்று
பெருவிருட்சமானதென்று
அவர்கள் அறிவார்கள்.
lareenahaq@gmail.com
|