நிலைமாறல்

எஸ். பாயிஸா அலி,கிண்ணியா

வியர்வை துளிர்த்தபடி
குளிர் நிறைந்திருந்த கூசா
வரண்டு கிடக்கிறது.
திமிர்ந்த ஒவ்வோர் நகர்தலுக்குமான
எதிர்வினைகள் செறிக்கப் படுகின்றன
கூசாவினுள் உறைமௌனங்களாய்.
மென்மேலும் பேரழுத்தங் கொண்டு
முழுவீச்சோடு தீய்க்கும்
அனற்கதிர் முன்னே
அசைவற்றிருந்த திண்மத் துகள்கள்
மெல்ல நிலைமாறலுற்றே
திரவ பின்னும் வாயுத் துணிக்கைகளாய்
பேருந்தங் கொண்டே
சுழன்றசையத் தொடங்குகையில்
தாக்குப்பிடிக்குமா மூடியும்?
இவர்களின்;
இன்றைய கவனமெல்லாம்
தொடராய் நிகழும் நிலைமாறலின் கூர்ப்பு வழியே
மௌனமொரு ரத்தக்காட்டேரியாகி
அவர்களின்;
குரல்வளைகளைக் குதறிவிடக் கூடாதென்பதில்தான்.


sfmali@kinniyans.net