மாயக்
கயிறு
எஸ்.
பாயிஸா அலி,கிண்ணியா
பூண்டு மணமும் குக்கர் விசிலொலியும் தாண்டி
கனவுகளால் மட்டுமே
பயணப்பட முடியும்.
இரைச்சலும் எதிர் கூற்றுகளும் மட்டுமே
இரைந்து கிடக்கும் செவிப்பறைகள்
ஒரு மென்மையான பாடலை ரசிப்பதும்
நீளமான கூர் நகங்கள்
பூவாகித் தேன் சொரிவதும்
கனவுகளுக்குள் மாத்திரமே சாத்தியமாதல் கூடும்.
சதாவும் புழங்கப்படும் கூடமொன்று
தேய்ந்த கால்தடம் தவிர
வேறதைத்தான் பார்த்திருக்கும்.
பறக்கவிட்டிருக்கிறேன் கனவுகளை
பிரபஞ்சத்தின் எல்லை வரை
ஒரு காற்றாடி போலே.
பயமேது எரிமலை சாக்கடை பற்றியெல்லாம்
ஏனெனில்
ஆன்மீகமே நுண்ணிழைகளாகித் திரிந்திருக்குமென்
காற்றாடியின் மாயக்கயிறு
வலிமையானதும் உன்னதமானதுங்கூட.
sfmali@kinniyans.net
|