ஒரு கனவும் கானலும்

லறீனா அப்துல் ஹக்


சிலருக்கு மட்டுமே வாழ்க்கை
வசப்பட்டு
விடுகிறது போலும்!
இன்னும்
பலருக்கு|
கனவுகள்கூட
கானல் நீராய்...

நிலவு தொட்டுவிடும் தூரத்தில்
இருப்பதான
கனவுகளில்...
வாழ்வின்
தாகங்களை 
அருந்திவிடும்
பிரயாசையில்...
தோற்றுப்போய்
நிற்கின்றேன், நான்!

மகிழ்வாயிருக்கவேண்டிய தருணங்களிலும்
எல்லாம்
இழந்து அந்தரத்தில்
அனாதரவாய்
நிற்பதான உணர்தலால்
அடிக்கடி
திடுக்கிட்டுப் போகின்றேன்!

தப்பு யாருடையது?
மனசு
கேட்கிறது!
கனவுகளில்
மகிழ்தலுக்கும்
அருகதையற்றுப்
போனவளாய், நான்!
நீ
?
எனக்குத்
தெரியவில்லை.

பிரித்துப் பார்க்கப்படாத மெயில்களெல்லாம்
மறந்துபோய்விட்ட
உன்
மன
உறுதிக்கு
சாட்சியமளிக்கின்றன
நல்வாழ்த்துக்கள்
!

எனக்குப் புரிகிறது
இப்போதெல்லாம்
வெறுமனே ஒரு...
'யாரோ' ஆகிவிட்ட
இவளுக்கு
இதையெல்லாம்
எழுதும் அருகதை
அறவே
கிடையாதுதான்,
புரிகிறது
.

உனக்குப் புரியாது என் மொழி
அது
மௌனத்தால்
ஆனது.
உன்னுடைய
மௌனம்போல் 
அது
அத்தனை கடுமையானதல்ல
ஆனால்
..
கண்ணீர்
நிறைந்தது
வலி
மிகுந்தது.

செவிமடுக்கப்படாத என் வார்த்தைகளின் பட்டியலில்
இதோ
இப்போது
இந்தக்
கவிதையும்
வரிசையில்
நீள்கிறது,
படிக்கப்படாமலேயே
!  


lareenahaq@gmail.com