மூத்தோர் என்றால் ...?  

மன்னார் அமுதன்                   

மூத்தோர் என்பவர் மூப்பல்ல; அவர் 
முதிர்ச்சியைக்
குறிப்பது வயதல்ல; வாக்கால்
காத்தோர்
எவரோ சமூகத்தை; எல்லாம்
மூத்தோரென
நான் முன்மொழிவேன்

பழமை பேசுதல் நோக்கமல்ல - பழம்
பெருமையைச்
சாற்றுதல் ஆக்கமல்ல
ஊக்கம்
தருமுரை எவ ருரைத்தாலும்
மூத்தோர்
வாக்காய் நானேற்பேன்

உவமைக் கதைகள் பல சொல்லி
உயர்ச்சியில்
பணிவை வலியுறுத்தி
கயமைக்
குணத்தை நீக்கிவிட - பல
கதைகள்
உரைத்தோர் மூத்தோரே

மரத்தின் நிழலில் நின்று கொண்டே
வேரைத்
தூற்றுதல் நலமோ சொல்
மரத்தின்
உவமை மனிதருக்கே -இதை
உணரா
மனிதர்கள் மரத்திற்கே

ஏற்றுக் கொள்ளும் மனமிருந்தால்
எதையும்
கற்கும் ஆர்வம் வரும்
மூத்தோர்
உரைகள் மருந்தாகும் - அதை
மதித்தால்
வாழ்க்கை விருந்தாகும்



amujo1984@gmail.com