சொல்லிவிட்டுப் போ!

லறீனா அப்துல் ஹக்

லைவுறும் சருகாய்
நம்முடைய வாழ்க்கை...
எந்த மரத்தில் எந்தக் கிளையில்
பூத்து மலர்வதென்பதும்...
எந்தக் கணத்தில் எத்தகைய காற்றுக்கு
உதிர்ந்து வீழ்ந்து சருகாதலென்பதும்
நம்முடைய தீர்மானத்தில் - ஒருபோதும்
தங்கியிருந்ததில்லை...

தொலைதூரம் செல்லும் நாரைகளாய்
நமது கனவுகள்...
மழையிலும் புயலிலும் அலைவுற்று
அவற்றுள் சில
செத்து வீழலாம்...
இன்னும் சில
திசைமாறிக் கலைந்தும் போகலாம்...
இந்தக் கணக்கில்...
மீண்டு வருபவை எத்தனையென்பது பற்றி
உனக்கு ஏதேனும் தெரியுமா, தோழனே?



நம்பிக்கையின் வலிமை பற்றி...
எதிர்பார்ப்புக்களின் கனதி பற்றி...
நீ நிறையச் சொல்லியிருக்கின்றாய்!
தடைகண்டு துவண்டு விடாமல்
தொடர்ந்திடும் ஒரு பயணம் பற்றி
இரவெல்லாம் பேசியிருக்கிறாய்...
பொறிகளை வசப்படுத்துதல் ஒரு தவம் என்று
பலதடவை கற்றுத் தந்திருக்கிறாய்...

எல்லாம் சரிதான்!
ஆனால்...
மனசின் வலிகளை...
குண்டூசியால் துளைப்பதான வேதனையை...
உள்ளுக்குள் எதுவோ ஒன்று
உடைவுற்று குருதி கசிவதான உணர்தலை...
வெறுமை விசுவரூபமெடுத்து
வெடித்துக் கிளம்புவதான பீதியை...
இப்படி எல்லாவற்றையும்
முற்றாக மறந்து உண்மையாய்ப் புன்னகைப்பதை
எப்படி சாத்தியப்படுத்தலாம்
என்பதையும் கொஞ்சம்
சொல்லிவிட்டுப் போ!

 


lareenahaq@gmail.com