கருஞ்சுவரில் குழாய் வரைந்து..

எஸ். பாயிஸா அலி,கிண்ணியா

ஆவலை மின்னவிட்டவாறே

இடியாய் வந்திறங்கியிருக்கிறது பெறுபேறு.

எப்போதும் போலே

எனக்கு மட்டுமில்லை நூறு விழுக்காடு

 முழுமைக்கான கரகோஷங்களுக்காய்

நடனமாடிய விரல்களிலிருந்தே

எனை நோக்கியும் நீள்கின்றன

சுட்டு விரல்கள்

இனியுமென்ன

சுரண்டித் தெரியும்

கடைக் கத்தரிக்காய் ஆகிற்றென்

கற்பித்தல்.

இல்லாத இடைவெளி வேண்டி

கிளறப் படுகின்றன

ஆவணக் கோப்புகள்.

துவக்க வருஷ்த்தின்

பேறு கால விடுமுறை நாட்களோ

இல்லை

நிறைந்து

 முந்தானைக்கு மேலாயும் கசிந்த

செல்லக் குழந்தையின் கதறல்   

துடைத்த நிமிஷத் துளிகளோ

மிகப் பெரும் நேரத் திருட்டாய்

 உணரப் படுகிற

இக்காலங்களுக்குள்

கணக்கில் வருவதேயில்லை

அதற்கான பதிலீடுகள்.

 உண்ணப் படாமலேயே குவிந்தழுகும்

 பணக்கார வீட்டுச் சமையலறைபோலே

 பல ஆய்வறைகள்

 தூசித்துத் தூங்கையிலே

கருஞ் சுவரில் குழாய் வரைந்து……

 காற்றிலேதான் செய்துவித்த

பரிசோதனைகள் யாவுமே

 பயணப் பட்டிருக்குமா

 பரீட்சை விடைத்தாள் வரைக்குமென்ற

 வினாவுக்கு மட்டும்

யாரிடமுண்டு விடை.

இது எனக்கான நேரம்

 இரைச்சலாய் மேலெழும் கோபமாயோ

 இல்லை

கண்ணீராய் வழியும் சாபமாயோ

பதிலை எதிர்பார்த்திருந்த

 பதட்டமான கணங்களுக்குள்

மிக மௌனமாகவே

 மீட்டிக் கொண்டிருக்கிறேன்

பேரறியா அந்தச் சீனக் கவிஞனின் வரிகளை..

.நான் கேட்கிறேன் -மறக்கிறேன்.

 நான் பார்க்கிறேன்- உணர்கிறேன்

நான் செய்கிறேன்- விளங்கிக் கொள்கிறேன்.....



sfmali@kinniyans.net