கல்லா(ய்) நீ

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

எனதென்று சொல்ல
அத்தாட்சிகளேதுமற்ற
வெளியொன்றில்
பயணிக்கிறதுனது
பாதங்கள்
ஒரு
வழிகாட்டியாகவோ
ஒரு
யாசகனாகவோ
நானெதிர்க்கத்
தலைப்படவில்லை

எனைச் சூழ
ஒரு
பெரும் மௌனத்தைப் பரத்தியிருக்கிறேன்
அதன்
சிறு பூக்கள் அடிச்சுவடுகளில் நசியுற
ஆகாயம்
கிழிக்கும் மின்னலாய்
பார்வையை
அலைய விட்டபடியிருக்கிறாய்

காலத்தின் தேவதைகள்
தம்
விலாக்களில் இறகு போர்த்தி
காதலின்
பாடலொன்றை
மெல்லிய
குரலில் இசைத்தபடி
சோலைகளைச்
சுற்றிப் பறந்தபடி இருக்கிறார்கள்

நீ தேவதைகளின் முகம் பார்க்கிறாய்
உனக்கவை
கோரமாய்த் தெரிந்திட
இறகு
நோக்கிக்  கூரம்பெறிந்து
அவற்றையும்
முடக்கிட முனைகிறாய்

உன் துர்புத்தி அறிந்து
தேவதைகளின்
காவலன்
உனைக்
கல்லாய் மாறிடச் சபிப்பானாயின்
இப்பொழுது
எனை விலங்கிட்டு
வசந்தங்களுக்கு
மீளவிடாமல்
ஆக்கிரமித்திருப்பதைப்
போல
அப்பொழுதும்
என் கல்லறை அடைத்து
நடுகல்லாய்க்
கிடப்பாயோ ?

 

mrishansha@gmail.com