தன்னம்பிக்கை

'கவியன்பன்' கலாம், அதிராம்பட்டினம்                  
                                           
வானம் ஏகும் பறவைகட்கு
            வாய்த்தச் சிறகே நம்பிக்கை;
கானம் பாடும் குயிலுக்கு
           குரலின் மீதே நம்பிக்கை;
மானம் உள்ள மனிதனுக்குள்
            மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;
ஆனதினால் சோம்பல் விலக்கினால்
            ஆற்றல் பெறும் வாழ்க்கை...!!!!!
எப்படி புரண்டாய்? எப்படி தவழ்ந்தாய்?
            எப்படி நின்றாய்? எப்படி நடந்தாய்?
அப்படித் தானே முயல்வாய்
            அனைத்திலுமாய்; ஆயுள் முழுவதுமாய்
உந்து சக்தி நிரம்பியுள்ள
            உன்னிடம் உண்டு திறமைதான்;
நொந்து காலத்தை வீணாக்கினால்
            நொடியில் பாயும் வறுமைதான்!!!!!
ஒவ்வொரு நொடியும் உன்றன்
            உழைப்பால் மட்டும் நிரப்பு;
அவ்வளவும் திரும்பி கிட்டும்
            அளவற்ற செல்வத்தின் பரப்பு
காலம் வருமென்று வீணாகக்
            காத்திருக்க வேண்டா கனவுடனே
ஞாலத்தில் உயர்ந்தோர் யாவரும்
            நாளும் உழைத்தே வென்றனரே