அறியாமை
இருளும்; அறிவென்னும் ஒளியும்
'கவியன்பன்' கலாம்,
அதிராம்பட்டினம்
கனாவின் பலனறியா மனமாய்;
கருவின் உருவறியா தாயாய்;
வினாவின் விடையறியா மாணவனாய்;
விடியலின் வரவறியா இரவாய்;
பணத்தின் மதிப்பறியா குழந்தையாய்;
படிப்பின் மதிப்பறியா பாமரனாய்;
உணவின் சுவையறியா உப்பில்லா
உணவாய் அறியாமை இருளாமே
கனாவும் பலித்ததும் புரிதலாய்;
கருவும் பெற்றபின் தெரிதலாய்;
வினாவின் விடையும் படிப்பிலாய்;
விடிவெள்ளி கூறும் விடியலாய்;
பணத்தின் மதிப்பறியும் பருவமாய்;
படித்தபின் பாமரனும் மேதையாய்;
உணவில் உப்பிட்டபின் சுவையாய்;
உணரப்படும் அறிவும் ஒளியாமே
இறையை அறியா உள்ளமாய்;
இல்லாளை அறியா கணவனாய்;
நிறையருள் அறியாச் சிந்தையாய்;
நிம்மதி அறியா எண்ணமாய்;
இறப்பினை அறியா ஆன்மாவாய்;
இம்மை அறியா வேடிக்கையாய்;
பிறப்பினை அறியாப் பிழைகளாய்;
பிணைந்துள்ள அறியாமை இருளாமே
மறையைக் கொண்டு இறையும்;
மகிழ்ச்சி கொண்டு மனைவியையும்;
நிறைந்துள்ளப் பேற்றினால் அருட்கொடையும்;
நித்தமும் தியானத்தால் நிம்மதியும்;
திறந்திடும் அகக்கண்ணால் இறப்பினையும்;
தீமைகளின் ஏமாற்றத்தால் இம்மையும்;
சிறந்த பிறப்பான உம்மையும்
சிந்திக்கும் அறிவும் ஒளியாமே
|