கதையல்ல உண்மை!

இ.பா.சிந்தன்



இரயில் பயணங்களில்
இருபுறமும் காற்று!

பார்வையை குத்தகைக்கு எடுக்கும்
பச்சைபசேல் வயல்வெளிகள்!

மெல்லிய உடல்கொண்ட
நெல்மணிக்கதிர்கள்!

நெடுநெடுவென வளர்ந்துவிட்ட
கெடுமுடியா பனைகள்!

இளங்காற்றை வீசுவதே
இப்பிறவிப்பயனென
இடித்துரைக்கும் தென்னைகள்!

கட்சி பேதமின்றி
கரும்புக்காட்டுக்குள்ளும்
படரும் (பாகற்)கொடிகள்!

இவற்றுக்கெல்லாம் பிரம்மா யார்?
இமைமுடி யோசிக்கையில்
'இட்லி வடை போண்டா' - எனும் குரல்
இரயில் நிறுத்தமென்பதை உணர்த்தியது!

பாதியிலே இறங்கவைத்த
பிரம்மாக்களை சந்திக்கும் ஆவல்!

இந்தியாவின் முதுகெலும்பாய்
காந்தியடிகள் சொல்லிவைத்த
கிராமங்களை நோக்கி நடந்தேன்!

விவசாயி எனும் பிரம்மன்
வீடு எனும் பெயரில்
ஓலைகளின் குடிசையில்
ஓசையின்றி வாழ்வதென்ன?

ஐ.ஆர்.எட்டு பொன்னியென
ஆயிரமாய் உருவாக்குமிவன்
இரண்டு ருபாய் அரிசியிலே
கஞ்சியுண்டு வாழ்வதென்ன?

நாற்பது ருபாய் கூலிக்கு
நாள்பூரா உழைப்பு!
நாலுமுழ வேட்டியிலோ
நாற்புறமும் கிழிசல்!

கிலோவுக்கு கிடைப்பதென்ன?

இறுதிவரை உழைத்தாலே
இரண்டு ருபாய்!
இடையில் வரும் தரகனுக்கோ
ஈரைந்து ருபாய்!

விசாரித்துப்பார்க்கையில் - ஏழை
விவசாயியின் உண்மை நிலை!

'கடன் தொல்லை'
'எலிக்கறி'
'தினம் ஒரு தற்கொலை'
'வசிக்க இடமில்லை'
'கந்துவட்டி மீட்டர்வட்டி'

சிறுகதைகளின் தலைப்பல்ல இவை!
சிறுவிவசாயிகளின் நிலை!

முதற்குடிமகன் முதல்
முற்றும்துறந்த முனிவன்வரை
மூன்று வேளை உணவளிக்கும்
உனக்கா இந்நிலை?

விடத்தை கொல்லையிலே எறிந்து
வில்லெனப்புறப்பட்டான்
விவசாயக்கூட்டமாய்!

வயிற்றிலே துண்டணிந்து
வீறுகொண்டு எழுந்தான்!
வாழ்வதற்கு வழிகேட்டு
வீதியிலே இறங்கினான்!

பத்து லட்சம் விவசாயி
பாரதத்தெருக்களிலே
பிச்சைகேட்டு நிற்பதுபோல்
போராட்டம் நடத்திநின்றான்!

மகிழ்ச்சியில் திளைத்தேன் நான்!
மறுநாளைய செய்திகள் பேசும் இவை - என
மனக்கோட்டை கட்டிவைத்தேன்!

மறுநாளைய செய்தியில்...........

சில பக்கங்களை நிறைத்தனர்
சிம்ரனும் அசினும்!

'நாங்கள் நண்பர்கள்'
நயனும் சிம்புவும்
பரபரப்பு பெட்டி

'பங்குச்சந்தை உயரும்'
ப.சிதம்பரம் நம்பிக்கை!

எங்கே போனது
எம் விவசாயப்போராட்டம்?

கோபத்தில் நடைபோட்டான்
கொல்லைப்புரம்நோக்கி!

வீசிய விடத்தை
விடாது குடித்தான்!

மறுநாளைய செய்தி!
'விசம் குடித்து
விவசாயி தற்கொலை!
கள்ளக்காதல் காரணமா!
விசாரித்து வருகிறது
விழுப்புரம் போலீசு!'



chinthanep@gmail.com