போனதடி பொய்யென ஓர் போர்!!

வித்யாசாகர்

வீசும் மழை போல் வீசி
அடங்கும் மழை போல்
அடங்கி

காணுமிடமெல்லாம்  கண்ணீர் தெளித்து
உயிர் கொண்டு போனதடி போர்;
எம் உயிர்கொண்டு போனதடி போர்!!

கொஞ்சும் மழலை கொன்று
நரை எஞ்சும் பலரை தின்று
பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து

தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடி போர்;

அங்கே அழித்துவிட்டே போனதடி போர்!!

துயிலந்தனை இடித்து
போர்வீரர்  பலரை  அழித்து
எமை ஊர் ஊராய் அலைகழித்து
போற்குற்றம்  புரிந்து விட்டதடி போர்;
சூழ்ச்சியோடு சில நரிகள் செய்திட்ட போர்!

கடல்கோல் குடித்த மிச்சத்தை
பின் - மழைவந்தும் மூழ்காத வீரத்தை
தனித்து வெல்லத் திராணியின்றி - யெம் வீரர்களை
கோழைகள் விஷம் வீசக் கொன்று போட்டதடி போர்,
கொன்று, தலைவிரித்தாடியதந்த போர்!!

எம் காலத்தை பின்னால் தள்ளி
எம் சாபத்தை காலத்திற்கும் சுமந்து
ஒரு இனத்தின் உரத்த அழுகை சப்தத்திற்கிடையே
ஆட்டமாடி பாட்டுப்பாடி வெற்றிக் களிப்பு கொண்டதடி போர்
பேரழிவின் - அரக்கத்தனம் பூண்டதடி போர்!

நான்  போனாலென்ன
என் பேத்தி யாள்வாள்,
 
நான் போனாலென்ன
என் மகனேனும் ஆள்வான்,

நான் போனாலென்ன
என் உறவுகளாவது ஆளும்,
 
நாங்கள் மொத்தம் போனாலென்ன
என் - சந்ததியேனும்  வாழும் வாழட்டுமே என்று
உயிர்பல தியாகித்த - என்
வீரர்களின் ரத்தம் பீய்ச்சி,

என் தமிழச்சியின் நிர்வாணத்தை
மரணத்தினால் உரித்து,

என் பிள்ளைகளின் கனவுகளை
உடலோடு எரித்து,
 
எம் அன்னையவள் -
இறந்துயெரித்த சாம்பலை கூடக் கொச்சைப்படுத்தி,

உரக்கச் சிரிக்கும் கயவர்களோடு
கூத்தாடிப் போனதடி போர்;

பொய்யெனச் சென்று
இன்றும் பின்னால் நின்று -
எமை மறைந்து மறைந்து தாக்குதடி போர்!
தீரா வஞ்சகத்தின் -
பொய்யெனப் போன அந்த போர்!!

 



vidhyasagar1976@gmail.com