வெண்மை
கலைத்தாமரை ராஜேஸ்வரி, மதுரை
தூய்மையின் தூரிகை தேசம்
தாய்மையின் கரிசனத்தைத்
தவறாது பறைசாற்றும் நிறம்!
முழுநிலவின் அழகினைத்
தன்னுள் தழுவித் தரணியெங்கும்
தவழசெய்யும் த்ண்மை நிறம்!
பொங்கும் கடலலையிலும்
பொக்கைவாய்ச் சிரிப்புக்
குழந்தையிடமும் குடிகொண்டு- நம்மைக்
குதூகலிக்கச் செய்யும்
குளிர்ச்சி தரும் நிறம்!
அனைத்து நிறங்களையும்
தன்னுள் அடக்கி
அன்பான ஆளுமை செய்யும்
அழகிய வெண்மை நிறம்!
கறையில்லா நெஞ்சங்களைச்
சிறைப்பிடித்து வெற்றிச்
சிகரமேற்றும் சிருங்கார நிறம்!
கல்விக்கரசியாம் கலைவாணியே
களிப்புடன் கலையாயுடுத்திய
விலை மதிப்பில்லா தெய்வீக நிறம்!
தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டி
தடம் புரளாமல் செல்வோரை
உதாரணம் காட்டி உரைக்க
உன்னதமான நிறம்!
பள்ளீச் சீருடையில்
பாங்காய் அலங்கரித்து
வெள்ளை உள்ளங்கொண்டப்
பிள்ளைச் செல்வங்களின்
உள்ளத்தில் ஒற்றுமை
உணர்வினை ஓங்கச்செய்யும்
ஒப்பில்லா நிறம்!
உள்ளத்து நட்பினை
ஓர் புன்னகையில் வெளிக்காட்ட- அப்
புன்னகையில் ஒளிர்ந்து
புத்துணர்வூட்டும் வெண்மை நிறம்!
|