21ஆம் நூற்றாண்டின் கிழக்கிந்தியக்கம்பெனிகள்!‏

இ.பா.சிந்தன்

விடுதலை தாகமும்,
வீறுகொண்ட கவிதையுமாய்,
கவிபாடி திரிந்தநான்,
கல்லறையில் அமைதியாய்
குடியிருக்க இயலவில்லை!

மீசையினை முறுக்கிவிட்டு,
முண்டாசை சரிசெய்து,
பாரதத்தின் நிலையை
பாட்டெழுத வந்தேனே !
பாரதியார் நான்தானே !

சென்னைநகர் சாலைகளில்
சுற்றிவர புறப்பட்டேன்!
உயரமாய் ஓர் கட்டிடம்!
அடையாள அட்டையுடனே
ஆண்களும் பெண்களுமாய்
உள்நுழைந்த காட்சி பார்த்தேன்!

வேலை செய்யும் அலுவலகமா?
இரும்படிக்கும் சத்தமேதும்
இம்மியளவும் கேட்கவில்லை!
கையிலேதும் கொண்டுசென்ற
காட்சியொன்றும் காணவில்லை!

என்னதான் நடக்கிறதிங்கே?
சாலையோர புழுதியிலே
யோசித்தே உறங்கினேன்,
யாரும் அறியா பாரதியாய்!

தூக்கத்தை கலைத்தது
தடம்பதித்த சத்தம்!
கண்விழித்துப்பார்க்கையிலே
ஆண்களும் பெண்களுமாய்
கலந்துரையாடியே வெளிவந்த
காட்சிகண்டு வியந்தேன்!

மணியோ பனிரெண்டு
மங்கை எவர்க்கும் பயமன்று!

விடியும்வரை காத்திருந்தேன்
வினாக்கள் பல வைத்திருந்தேன்
வரிசையாய் தொடுப்பதற்கு!

விடியலும் வந்த வேளையிலே
வாசலருகே நடந்தவனை
வழிமறித்து 'தம்பி' என்றேன்!

"YES, TELL ME" என்றான்!
ஐயகோ! இவன் ஆங்கிலேயன்!
அழித்தொழிக்கப்படவேண்டியவன்!

பலம் மொத்தம் கையில் ஏற்றி
பின்மண்டைப்பிடரியிலே
பளீரென்று ஒன்று விட்டேன்!

'அம்மா.........' என
அலறினான்!
அடித்த அடியில்
அழகுதமிழ்
அருமையாய் வந்தது!

தமிழ்மறந்த தமிழனிடம்
பெயரென்ன எனக்கேட்டேன்!
புலம்பியபடி பெயர் சொன்னான்!

முன்தினம் பார்த்தவற்றின்
முழுவிவரம் அறியக்கேட்டேன்!

"SOFTWARE COMPANY......” என்று இழுத்து
மென்பொருள் நிறுவனமென்றான்!
வாங்கிய அடி
வேலை செய்தது!

'ஆணும் பெண்ணும் சமம்!
அளவுக்கும் அதிகமாய் ஊதியம்!
வாரத்தில் இருநாள் விடுப்பு!
வேலைத்திறன் வைத்தே உயர்வு!
ஏராளமாய் உண்டிங்கே சலுகை!'

ஆகாவெனப்புகழ்பாடி
அலுவலகம் உள்நுழைந்தான்!

சிறுமகிழ்ச்சி மனதிற்குள்
சமச்சீர் இந்தியாவின்
சாத்தியங்கள் நெருங்குதோ!

சிந்தித்துக்கொண்டிருக்கையிலே
சிலர் அலுவலகம் வெளியே
சோகமாய் வந்தது கண்டேன்!

புகழ் பாடியவனும்
புருவம் நனைய
புலம்பி அழுதான்!

'எல்லாம் கிடைக்கிறதிங்கே!
என்றும் நிலைக்கிற ஒரு வேலையைத்தவிர!

அமெரிக்கா ஆட்டங்கண்டால்
அம்பத்தூரில் வேலைபோகும்!

இதுதான்
இன்றைய நிலை!'

எங்கே போனது
எம் சுதேசியம்!

இவர்கள்தான்
இருபத்தோராம் நூற்றாண்டின்
கிழக்கிந்தியக்கம்பெனிகளோ!!!


chinthanep@gmail.com