தேவதைராட்சஸி

ஆத்மார்த்தி

எனக்கு காணக்கிடைத்தது ஒரு தேவதை.
நீண்ட கூந்தலிலிருந்து
நறுமணம் வீசிக்கொண்டிருந்தது.
இரண்டிரண்டாக மொத்தம் ஆறு கைகள்
நான்கில் ஆயுதங்களைத் தாங்கியிருந்தாள்.
இரண்டு கைகளால்
என் தலையை வருட முற்பட்டாள்.
ஆசீர்வதிக்கவே அவ்வாறு செய்கிறாள்
என்பதை உணர்ந்தவனாய்
வருடலை ரசித்தபடி இருந்தேன்.
அவ்வளவு இதமாய் இருந்தது.
கண்களை மூடி உறங்கலானேன்.
கனவொன்று வந்தது.
கனவில் உறங்கிக்கொண்டிருந்தேன்.
உறக்கத்தில்
என் தலையைக் கொய்து
ஒரு ராட்சஸி
சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவள் கைகளில்
உருண்டு கொண்டிருந்தது
எனது தலை.
இருந்தபோதும்
என் கண்கள் திறந்துகொண்டிருந்தன.
ஆசீர்வதிக்கும் தேவதை
என் தலையை வருடுகிறாள்.
என் கண்கள் மூடியிருக்கின்றன.
தேவதையின் முகமும்
ராட்சஸியின் முகமும்
ஒன்று போலும்
வெவ்வேறாகவும் இருந்ததாக
எனக்கு ஞாபகம்.

 

aathmaarthi@gmail.com