காணாமல் போனவர்கள்!

இ.பா.சிந்தன்

முதல் வகுப்பின்
முகப்பு நாள்!

அம்மாவின் முந்தானையில்
அழுகையும் புலம்பலுமாய்
ஆர்ப்பாட்டம் செய்தநாள்!

இடக்கையோ அன்னையை பிடிக்க
வலக்கையை ஆசிரியை இழுக்க
வகுப்பின் வாசலிலே
வடம்பிடித்து அடம்பிடித்தநாள்!

மிரட்டலின் முடிவிலே
முகமெங்கும் கண்ணீராய்
முன்வரிசைச்சீட்டிலே
முனகலுடன் அமர்ந்தநாள்!

அழுகையெல்லாம் முடிந்தபின்னர்
அருகிலே அமர்ந்தவனை
பெயரென்ன கூறு என
பார்வையாலே கேட்டு வைத்தேன்!

வீ.ரவி என்றான்!
பி.பாலு என்றேன்!

தோள்மீது கைபோட்டான்!
தோழன் கிடைத்துவிட்டான் - என
தைரியமாய் புன்னகைத்தேன்!

பின்னால் திரும்பினால்
பாவாடை சட்டையில்
பக்கத்துவீட்டு பவானி!

தெற்றுப்பல் தெரியவே
தாராளமாய் சிரித்துவைத்தேன்!

வேகமாய் உருண்டன
வருடங்கள் சில....

ஆறாம் வகுப்பிலே
அடியெடுத்து வைத்தேன்!

வீ.ரவியை காணவில்லை!
வீட்டிற்கே சென்று பார்த்தேன்!

வறுமையென்றான்!
வடைசுட்டு விற்பதாக
வருத்தமாய் வாடிநின்றான்!
விளங்கவில்லை எனக்கொன்றும்!

காலப்போக்கில்
காணாமல் போனான்!

வேகமாய் உருண்டன
வருடங்கள் சில....

எட்டாக்கனியை எட்டிப்பிடித்தவனாய்
எட்டாம் வகுப்பு உள்நுழைந்தேன்!

பாவாடை சட்டையெல்லாம்
தாவணிக்கு தாவிவிட்ட
திடீர் திருப்பம்!

அரை டவுசரெல்லாம்
முழுதாய் மாறிய காலம்!

பின்வரிசை மாணவர்கள்
பாதிப்பேர் காணவில்லை!

பெயிலாகிச்சென்றோர் சிலர்!
பாசாகித்தொடராதோர் பலர்!

வறுமையென்றார்கள்! ஏழ்மையென்றார்கள்!
விளங்கவில்லை எனக்கொன்றும்!

காணாமல் போனவர்கள் எங்கே?
கேள்விக்கு விடையில்லை!

படிப்பில் முதல்மாணவி
பவானியும் காணவில்லை!

மனதிற்குள் சிறுமகிழ்ச்சி!-இனிநான்
முதல்மாணவன் ஆகிடலாமே!

வீடுசென்றேன்,
விவரம் கேட்க!

பக்கத்து பங்களாவில்
பாத்திரம் தேய்க்கும் வேலை!

கிழிசல்கள் நிறைந்த
கந்ததுணியே அவள் ஆடை!

என் புத்தகப்பையை
பார்த்த அவளின் ஏக்கப்பார்வை!

குளமாகியது கண்கள்!

வேகமாய் உருண்டன
வருடங்கள் சில....

பாடச்சுமைநினைத்தே
பத்தாம் வகுப்பினுள்
பயந்தே கால்வைத்தேன்!

முட்டிபோட்டு அடிபெற்றோர்
மக்கென்றும் தத்தியென்றும்
மகுடங்கள் சூட்டப்பட்டோர்
யாவருமே காணவில்லை!

பாதியும் இல்லை
பெண்களின் எண்ணிக்கை!

காணாமல் போனவர்கள் எங்கே!
கேள்விக்கு விடையில்லை!

பனிரெண்டாம் வகுப்பும் வந்தது!
காணாதோர் பட்டியலும்
கடகடவென உயர்ந்தது!

பொதுத்தேர்வும் முடிந்தது!
பள்ளிப்பருவத்திற்கு
புள்ளியொன்று வைத்தது!

கனவுக்கோட்டையுடன்
கல்லூரி வாயிலிலே
காலடி எடுத்து வைத்தேன்!

பார்வையில் படவில்லை
பள்ளிநண்பர் எவரும்!

ஏழ்மைகொண்ட மாணவர்கள்
எவருமிங்கு காணவில்லை!

காணாமல் போனவர்கள் எங்கே!
கேள்விக்கு விடையில்லை!

கல்விதனை காசாக்கும்
கொடுமையினை எதிர்ப்போம்!
காணாதோர் பட்டியலை -இனி
இல்லாமல் செய்வோம்!




chinthanep@gmail.com