குயில்கள் இப்போது குரைக்கின்றன..
கவிஞர் பொத்துவில் அஸ்மின்
ஓவியம் வரையும் தூரிகை கொண்டு
ஓட்டடை அடிக்கின்றாய்...
காவியம் பாடும் கைகளை கொண்டு
கற்களை உடைக்கின்றாய்....
சாதனை படைக்கும் சக்தி இருந்தும்
சாக்கடை அள்ளுகின்றாய்...
சரித்திரம் படைக்க பிறந்தவன் நீயோ
சப்பாத்து துடைக்கின்றாய்....
சவுக்கால் உன்னை அடிப்போருக்கு
சாமரை வீசுகின்றாய்..
சருகாய் உன்னை ஆக்கியோருக்கு
சந்தனம் பூசுகின்றாய்...
பசியை உனக்கு தருவோருக்கு
சோறு சமைக்கின்றாய்....
நஞ்சை உனக்கு தந்தோரிடமும்
நலமா என்கின்றாய்..
கடலைப் உனக்குள் வைத்துக் கொண்டு
பிச்சை கேட்கின்றாய்...
ஆயிரம் சூரியன் அருகில் இருந்தும்
இருட்டில் இருக்கின்றாய்....
நாட்டை சுமக்கும் தோள்கள் உனது
மூட்டை சுமக்கின்றாய்...
மூட்டை சுமந்தும் பசியால் ஏனோ
முடங்கிப்போகின்றாய்...
?
உறவுகள் ஆயிரம் இருந்தும் ஈற்றில்
உணவுக்கலைகின்றாய்..
தேகம்தேய உழைத்துமென்ன
தெருவில் நிற்கின்றாய்...
தென்றல் கூட புயலாய் மாறும்
தெரிந்து கொள்ளப்பா...
துவண்டு கிடந்து அழிதல் விட்டு
துணிந்து நில்லப்பா
மரணம் என்ற நோயை கொல்ல
மருந்து இல்லப்பா..!
வாழும் வரைக்கும் உனக்காய் வாழ்வை
வாழ்ந்து பாரப்பா
தண்ணீர்கூட கோபம் வந்தால்
தட்டிக் கேட்கும்பா..
வெட்கம் கெட்ட உந்தன் நெஞ்சை
வெட்டிப் போடப்பா..
பாசம் நேசம் பந்தம் எல்லாம்
பழைய பொய்யப்பா
வேசம்போடும் மனிதர் கூட்டம்
விளங்கிக்கொள்ளப்பா
உந்தன் கையில் காசு இருந்தால்
ஊரும் மதிக்கும்பா...
சுவாசம் கூட தேவையென்றால்
சும்மா கிடைக்கும்பா...
தண்ணீர் தோட்டம் வைத்துக்கொண்டு
தாகம் குடிக்காதே....
கண்ணீர் சிந்தி கலங்கி நின்றால்
கவிதை பிறக்காதே...
குயிலை உனக்குள் வைத்துக்கொண்டு
குரைத்துத் திரியாதே...
குட்டுப்பட்டு குட்டுபட்டே
குன்றிப்போகாதே..
காக்கைகூட நல்லவை சொன்னால்
காது கொடுத்து கேள்...
அகந்தை கொண்டு கேட்க மறுத்தால்
அதுவே உனக்கு வாள்..
நன்றி கெட்ட மனிதனை பார்க்கிலும்
நாய்கள் என்றும் மேல்...
என்பதை உணர்ந்து வாழ்வாயாயின்
வானம் உனக்கு கீழ்...!
vtvasmin@gmail.com
|