அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது
துவாரகன்
உயிரைக் கொண்டோடிய
கணத்தில்
தாயைப் பறிகொடுத்தாள்.
சோதரி கைபிடித்து
மீண்டு வந்தாள்.
வாரப்படாத தலை
கறைபடிந்த பற்கள்
உயிர்ப்பற்ற சிரிப்பு
குமரியானாலும் குறுகி நடந்தாள்
தனிக்குடிலில் ஒதுங்கியிருந்தாள்
சில அப்பாக்களைப் போலவே
ஒருநாள் புதுத்துணைவியோடு
பெற்றவன் வந்தான்.
வாடிய பூக்களிடையே
மீண்டும் அவள்
காணாமற்போயிருந்தாள்.
அவளுக்கென்று எதுவுமில்லாதபோது
ஒருநாள்
அதிசயமாகச் சிரித்துக் கொண்டு வந்தாள்.
அவளுக்கொரு
புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது.
kuneswaran@gmail.com
|