கண்ணீரில் உறையும் அவன்

ச.கோபிநாத், சேலம்.

நேரம் தாழ்த்தி கண் விழித்ததில் தொடங்கி
என் பணிகளின் பொருட்டு
ஏற்பட்ட தாமங்களினூடே
உணவருந்தாது விரைந்ததை
திட்டியபடியிருப்பாள் என் அன்னை!

ஊர் உறங்கும் வேளையில்
என் பணிகள் முடித்து
வீடு திரும்புகையில்
இரவுப்பொழுதென்றும் பாராது
காண் விழித்திருந்து
கதவு திறப்பாள் அவள்.

மதிப்பெண் குறைந்த‌
தேர்வு மதிப்பீட்டு அட்டைதனை
காட்ட முனைந்த வேளைகளிலெல்லாம்
தந்தை திட்டுவாரென்ற பயத்தினூடே
தாயின் துணைநாடி
தப்பிக்க முற்பட்டது என் இருப்பு.

என் விருப்பு வெறுப்புணர்ந்து
பக்குவமாய் தேர்ந்தெடுத்து
அவள் அளிக்கும்
ஓவ்வொன்றிலும்
நிச்சயம் நிறைந்திருக்கும்
அவளின் ‍பரிவுடனான அக்கறை.

அந்திவான பொழுதொன்றில்
சன்னமாய் தூறும் தூறலென‌
மனதுக்கு இதமளிக்கும் அவளிருப்பை
நான் உரைத்து
மகிழ்வில் உறைய‌
ஏக்கங்கள் எத்தனிக்க‌
கண்ணீரில் உறைகிறான்
தன் தாயை இழந்த அவன்.




kalaithilagam.gopinath@gmail.com