இதயப் பாயை விரிப்பாளோ..!

கவிஞர் பொத்துவில் அஸ்மின்

கண்கள் இரண்டும் அரிவாளோ-அவள்
காதல் வலியை அறிவாளோ...?
புன்னகை அவளின் உறைவாளோ-என்
பூவிழி வாசலில் உறைவாளோ

இடைகள் கொல்லும் இடைவாளோ-அவள்
இதழால் என்னை அடைவாளோ
இமைகள் எங்கும் கொலைவாளோ-என்
இதயம் கொன்று தொலைவாளோ...

நாணம் அவளின் பெருவாளோ-ஒரு
நாளில் காதல் பெறுவாளோ...?
பூவை ஏந்தி வருவாளோ-இல்லை
பூமி அதிர்ச்சி தருவாளோ

கதையாய் எனக்குள் எழுவாளோ-என்
கனவை வந்து உழுவாளோ
விதையாய் எனக்குள் விழுவாளோ-நான்
விழுந்தால் கூட அழுவாளோ...

வாழ்வில் வந்து நிறைவாளோ-இல்லை
வாட்டம் தந்து மறைவாளோ
கண்ணால் ஹைகூ வரைவாளோ-இல்லை
கன்னம் சிவக்க அறைவாளோ

அலைபோல் வந்து அடிப்பாளோ-இல்லை
அன்பால் என்னை படிப்பாளோ
கவியாய் வந்து துடிப்பாளோ-இல்லை
கைக் குண்டாக வெடிப்பாளோ

அழகுத் தமிழில் கதைப்பாளோ-இல்லை
ஆங்கி லத்தால் உதைப்பாளோ
கவிதை சொல்ல அழைப்பாளோ-இல்லை
கருவைப் போலே கலைப்பாளோ..

பார்க்க பார்க்க முறைப்பாளோ-இல்லை
பார்வை கொண்டு குரைப்பாளோ..!
காதல் மொழிகள் உரைப்பாளோ-இல்லை
கள்ளி மனசை மறைப்பாளோ..!

கவிதை கண்டு சிரிப்பாளோ-இல்லை
கழுத்தை வந்து நெரிப்பாளோ..!!
இதயப் பாயை விரிப்பாளோ -இல்லை
இறக்கும் நாளை குறிப்பாளோ..!!


vtvasmin@gmail.com