1.காலம்
ஒரு கணந்தான்....!
ஜுமானா ஜுனைட், இலங்கை.
உண்மைக்கு
உயர்வளி
உயிருக்கு
உணர்வளிக்கும்...
நீதிக்கு
உரமூட்டு
உன் வாழ்வுக்கு
மெருகூட்டும்...
கார்மேகமாய் இரு
இடமறிந்து பொழி...
உன் பாதைகளோ
பல்வேறு
அறிந்து செல் வழி...
வார்த்தையில்
உண்மை வை..
நெஞ்சத்தை
நிஜங்களால் நிரப்பு..
வஞ்சகத்தை விட்டு
நீங்கிவிடு...
மலைகளில்
ஊற்றெடுக்கும்
நீர் வீழ்ச்சியாய்
நில்லு...
அருவி போல்
பாய்ந்து போ...
சூர்யன் ஈர்த்தாலும்
வானில் சென்று
முகிலாகு...
உன்னை ஈன்ற
பூமிக்கே
திரும்பி வா
மழையாய்...
வாழை வேருட் சென்று
வெளி வா
குலையாய்...!
.............................................
2.காலம்
ஒரு கணந்தான்....!
ஒளியிலே தேடு
நிஜங்களை...
ஒளிவுமறைவின்றி
உண்மை பேசு..
படகு செல்ல
அருவியாய் நில்லு...
காலம் உணர்த்த
நட்சத்திரமாய் மின்னு...
வழிகாட்டும்
கலங்கரை விளக்காகு...
ஒளியூட்டும்
இரத்தினக் கல்லாகு..
பாறையில் மோதிடும்
நீரலை உடையினும்
நீரதில் குறைவுகள்
உண்டாவதில்லை...
பாரினில் சூழ்நிலைக்கு
நீரலையாய் உழை...
காலமோ மின்னல் போல் -
அதிலும்
வாழ்க்கையோ ஒரு துளி..
எதிலும் சோர்ந்திடாமல் துணி...
முயன்றால்
ஆயுள் நீளும்
ஆனால்
உயிரோ எமைவிட்டு
பிரிந்தே தீரும்...
இதை உணர்ந்தால்
எம் வாழ்வு முன்னேறும்;...!
....................................................
3.காலம்
ஒரு கணந்தான்....!
இது
மின்னல் வாழ்க்கை
மின்னிப் பாரு
மீதி வாழ்க்கை
எங்கு
தேடிப் பாரு
கண்ணில் இமைகள்
மூடிமூடி
காற்றினாலே
திறப்பதுண்டு,
மூடித்திறக்கும் ஆயிடையில்
வாழ்வே மாறும்
வாழ்ந்து பாரு!
காலைக் கதிர்
சுடுவதில்லையே,
சுணங்கிப் போனால்
பாதம் கூட
தீ மிதிக்குமே!,
பாரில் இந்த
வாழ்க்கை கூடவே
தாமதத்தால்
பாதம் போல ஆகக் கூடுமே!
ஓசை தரும்
அலைகள் கூடவே
கடலில்
உடைந்து -
நொருங்கி -
வீழ்ந்து போகுமே
ஒன்றுபட்டு
மீண்டும் இணைவதால்
அவை வானைத் தொட
தொடர்ந்து முனையுமே..
அலைகள்
தோற்று தோற்றே போயினும்
அவை துவண்டிடாமல்
விடாது முயல்வதால்
ஆவியாகி விண்ணையடையுமே...
உலக வாழ்க்கை
இதிலே யாமும்
விடாது முயல்வதால்
எதுவும் தோல்வியாக
இறுதி வரைக்கும்
ஆவதில்லையே..,
என்றோ ஒருநாள்
முயல்வின் முடிவைப்
பெற்று மகிழத்தான்
அலைகள் போல
தினமும் நாமும்
அலைந்து முயல்கிறோம்;...!!
jjunaid3026@yahoo.com
|