நல்லூர்க்கந்தனே காப்பாற்று

மானியூர் மைந்தன்

நானிலம் போற்றும் நல்லூர்முருகனே-எம்
ஊயிரிலே கலந்துவிட்ட தமிழ்கடவுள் நீயே
ஆடிமாதம் ஓடிவந்து நாடியுந்தன் வீதியிலே
வடிவழகுத் தேரிழுத்து தரிசித்தோம்-இன்று
தெருவீதியிலும் கடல்கடந்தும் அகதியாய்
கதியின்றி காத்திருந்து கலைந்துபோன கனவுடன்
நாதியற்றுநடைப்பிணமாய் தவிக்கின்றோம்

இல்லைஎன்பதனை இல்லாது ஒழித்திடவே
குண்டுபட்ட குடலோடு குரல்வைத்த கனலொன்று
கல்லையே கனியவைக்கும் காவியம் படைத்தன்று
சொல்லிலே பலவார்த்தை சொல்லாமல் செயலிலே
நல்லூரான் உந்தன் வீதியிலே உயிர்துறந்தான்
இன்னல் கண்டுபொறுக்காத பிள்ளையொன்று
நாமெலாம் நிரைநின்று நீர்உகுக்க
மெழுகாய்மெல்ல உருகிக் கரைந்தான்

காந்தீயதேசம் காவலுக்கு வருமென்று
கனவோடு காத்திருக்க கயவரோடு கூடி
ஆடிமுடித்ததங்கே இனவெறிக் கொதியாட்டம்
காற்றும் நுழையாத முட்கம்பிக் கூட்டுக்குள்ளே
முடங்கிக் கிடக்கிறது தமிழ்க்கூட்டம்

உயிர்வேட்டை நடத்துவோரின் ஓங்காரக்குரல் ஒலிக்கையிலே
உன் பக்தரின் உயிர்ஓலம் கேட்கலையோ கந்தா
ஆற்றாமை இயலாமை தோற்றுவித்த அனுபவங்கள்
ஆழப்பதிந்துவிட்ட அழிவுகளால் சலித்து உளம்
ஆற்றாமல் அலைந்தபோது ஆறுமுகா நீ எங்குற்றாய்
தேற்றாது நீ விட்ட காரணம்தான் கூறுவையோ

சங்கம் வளர்த்த தங்கத்தமிழுக்கு பங்கம் விழைந்ததே இன்று
முடிவேந்தர் மூவர் இறுதி மூச்சுவரை காத்ததமிழ்
பேச்சின்றி விலாசம் தொலைத்து நிற்கிறது
சூரனைச்சங்கரித்த தமிழ்க்கந்தா
உயிர்ப்புக்கும் வாழ்வுக்கும் செந்நீரால் அஞ்சலித்து
ஊரைவிட்டோடி துயரத்தில் தனித்தனரே
தவித்தோடி தமிழரின்று -முருகா
இனியேனும் வேலவனே நின்மதியாய் வாழ்வளித்து
காப்பாற்று வேல்கொண்டு வினைதீர்த்து
வாழவை தமிழை தமிழனை




navaas06@yahoo.de