ஒரு சொல் போகும் நேரம்..

வித்யாசாகர்
 

னக்கென்று பிறந்த ஒன்று
இன்று எனைவிட்டுப் போகப்போகிறது;

நான் சிரிக்கையில் சிரித்து
அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது;

நடக்கையில் நடக்கவும்
உறங்கையில் உறங்கவும்
சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று
போகப்போகிறது

வளரும்போதே உடன் வளர்ந்து
எனை வளர்த்த
தாயைப் போன்றதுஇன்றுப்
போகப்போகிறது

அசிங்கம் பேசினாலும் சரி
அவதூறு பேசினாலும் சரி
செய்வது எதுவாயினும்
நான் சொல்வதை மட்டுமே செய்த ஒன்று
போகப்போகிறது;

எனைவிட்டு இம்மியளவு பிரிந்ததில்லை
வேறு யாருக்கென்றும் பிறக்கவில்லை
எனக்காகவே பிறந்ததின்று
போகப்போகிறது;

கல்லை நொருக்கவும்
காலத்தை அறுக்கவும் முடிந்த அதை
எப்படி என்னோடிருந்து அகற்ற
மனம் கொண்டேனென யோசிக்கிறேன்,

வேறென்ன செய்ய வலிக்கான மருந்தில்லை
வலியை பொறுக்கும் பலமுமில்லை
வேறு வழியின்றி
அகற்றியப் பல்லிற்கு விடைகொடுக்கிறேன்; போய் வா..

பல் போனால் சொல் போனதாய்
சொன்னவர்களை பயத்தோடிங்கு
நினைவு கூறுகிறேன், போ..

என்றாலும் எனது சொற்களை சொச்சப் பற்கள்
சேகரித்துக் கொள்ளும்
தமிழ் இனியுமதில் நன்றே மணக்கும்..

பிடிங்கி எரியுமளவிற்கான வலியை யொழித்த
விடுதலையை இனி
மற்ற பற்கள் கொண்டாடும்..

வாழ்க அந்த பல்பிடுங்கிய மருத்துவர்
ஒழிக சொத்தைப் பல்வலி..

 

vidhyasagar1976@gmail.com