கட்டிலை உடைத்துவிடேன் காமம்..

வித்யாசாகர்

விழித்திரைக் கிழித்து
இதயம் கெடுக்குதே காமம்,
பல விளக்குகள் அணைத்து
இருட்டினுள் அடைக்குதே காமம்;

மனத்திரை அகற்றி
மனிதரை நெய்யுது காமம்,
அது மிருகமாய் மாறிட
உள்நின்றுச் சிரிக்குதே காமம்;

விரகத்தில் எரிக்குது
நிர்வாணம் புசிக்குது காமம்,
நிம்மதியை அழிக்குதுதெரிந்தே
குடும்பத்தை யொழிக்குதே காமம்;

காதல் காதல் என்றெல்லாம்
பொய்யினுள் புதையுதே காமம்,
பொழுது விடியவும் அடையவும்
பெண்களைக் கொல்லுதே காமம்;

விதவையை வதைக்குது
வாழ்க்கையைத் தொலைக்குதே காமம்,
முதிர்க்கண்ணி கண்ணனென்று வாலிப
நெருப்பினால் மனிதரைக் கொல்லுதே காமம்;

பிஞ்சு வயதையும்
பார்த்துச் சிரிக்குதே காமம்,
மகளின் பச்சையுடல் பார்த்ததை
அச்சமின்றி மறக்குதே காமம்;

பசிக்குத் தின்றிட பெற்றவளைத்
தேடுமா காமம் ?
பின் பார்ப்பவளை யெல்லாம் பசிக்கு
இரையாக்கினால்பின் பூமியென்னாகுமோ, காமம்?

பத்து வயதுகூட எப்படி
பார்த்ததும் இனிக்குதோ காமம் (?)
ஐயோ பசி பசி என்பாருக்கும்
துணிந்துப் பாதகம் செய்யுதே காமம்;

ச்சீ விட்டகன்று
மானுடமொழியேன் காமம்
பெண்ணவள் மார்பினுள் வழியும்
தாய்மையது போதுமே காமம்;

மனிதரை விலங்கிலிருந்துக் கொஞ்சம்
மனிதற்கே பிரித்துக் கொடேன் காமம்,
பெண்ணுடலை போதையின்றி
இனி நடக்கவிடேன் காமம்..


vidhyasagar1976@gmail.com