நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்
எம்.ரிஷான் ஷெரீப்
சந்திப்பதற்கான ப்ரியம்
பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து
ஆரம்பிக்கிறது
உன்னிடம் பகரக் காத்திருக்கும் சொற்களையெல்லாம்
தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக் கிளி
ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது
நீ பரிசளித்த அக் கிளி
சிறகுகள் சுற்றிக் கட்டப்பட்ட அதற்குக் கனவுகளில்லை
கிளையில்லை
;
ஆகாயமில்லை
ஒரு கூண்டு கூட இல்லை
நீ கவனித்திருக்கிறாயா
விரல்களை அசைத்தசைத்து
நான் ஏன் ஒற்றைப் பாடலை இசைக்கிறேனென
உனது கவனத்திற்கும் அப்பாலான எனது கனவிற்குள்
நீயறியாதபடி
இருக்கிறது திரைகளேதுமற்ற ஒரு வாசச் சோலை
உனது கிளி அமர்ந்திருக்கும்
இச் சீமெந்து வாங்கின் மூலையில்
ஆறிக் குளிர்ந்திருக்கின்றன இரு தேநீர்க் குவளைகள்
வாசிக்க மனமின்றி மூடி வைத்த புத்தகத்தில் பட்டு
மின்னுகிறது பொன்னந்தி மாலை
எனது சோலைக்கு நீ வரவேயில்லை
தோட்டத்தின் ஐங்கோணப் பலகை வேலி தாண்டி
பூஞ்சோலைக் காவல் சிறுமி
நரம்புகள் பூக்காச் சிறு கரங்களில்
கிளியை ஒரு குழந்தையென ஏந்தி
பறந்து கொண்டிருக்கிறாள்
mrishanshareef@gmail.com
|