தூக்கம் திருடிய மிருகம்..

வித்யாசாகர்

தூக்கத்திற்காக ஏங்கும்
இரவுகளை தெரியுமா உங்களுக்கு...?

உறங்கமுடியா இரவும்
நஞ்சு கலந்துண்ணும் உணவும் ஒன்றென்று
மூட்டைபூச்சிற்கும் தெரியவில்லை
சில மனிதர்க்கும் புரியவில்லை..

மூட்டைபூச்சிற்குப் பயந்து
இரவெல்லாம் மின்விளக்கிட்டு
உறங்காமல் அமர்ந்திருக்கும் எங்களை
சம்பளம் தரும் நிறுவனம்
தூங்குமூஞ்சு என்றுதான் அழைக்கிறது..

கண்கள் சிவந்தப் பகலில்
மனைவி குழந்தைகளைவிட அதிகம்
மூட்டைபூச்சிகளை நினைத்துதான் போகிறது எங்களின்
வளைகுடா வாழ்நாட்கள் என்பதை
வளைகுடா வசப்பட்டவர் அறிவர்..

உண்மையில் நாங்களெல்லாம்
வாங்கும் சம்பளம் குறைவென்றோ
வீட்டு நியாபகம் வருகிறதென்றோ
வட்டிக்கடன் ஏறுதென்றோக் கூட
இத்தனை பயந்ததில்லை வருந்தியதில்லை
ஆனால் -

மூட்டைபூச்சி என்று சொன்னாலேப் போதும்; அப்பப்பா!!!
வீட்டைக்கூட கொளுத்திடலாம்
மூட்டைபூச்சியோடு வாழ யியலாது..

முதுகெல்லாம் கடிக்கும்
கால்களை சொரியச் சொரிய நமைக்கும்
புதுசட்டைப் போட்டால்கூட
மேலூருவதுபோல் உடம்பு கூசும்,
பகலையுண்ணத் துவங்கிவிட்ட இரவைத் தொடுகையில்
எதிரிகளைத் தாக்கயியலா கோழையைப்போல
படுக்கையறையைப் பார்க்கவே பயம் வரும்;

என்னசெய்வது'
ரத்தம் குடிக்கும் மிருகங்களுக்கு
மத்தியில் வாழ்கையில்
தூக்கம்திருடும் மூட்டைபூச்சியை எண்ணுவதும்
பிரிவைக் கண்டு அஞ்சுவதைப்போலவே -
ஏக்கம் சுமந்த எங்கள் வாழ்வின் இன்னொரு சாபம் தான்..

 

vidhyasagar1976@gmail.com