சிவப்பு எறும்புப் பாதங்கள் (தெலுங்கு கவிதை)

எம்.எஸ்.சூரிய நாராயணா

தமிழில்: சாந்தா தத்

தேன் பொழியும் இரவினுள்
எறும்பு செய்யும் யாத்திரை ஒரு
கவித்துவச் சரித்திரம்

ஏழு சமுத்திரங்களுக்கப்பால்
பாலைவன மணல் பொந்துகளில்
ஒளித்த மிட்டாய் பொட்டலத்துள்
எப்படி நுழைந்தது?

இதன் பாத முத்திரைகளையொட்டி
மூலங்களுக்குள் ஊர்ந்து செல்ல வேண்டும்

எங்கு... கண்சிமிட்டும் நேரம்
தங்கினோமோ... தவம் செய்தோமோ
தெரிந்து கொள்வதற்குள்
சட்டெனக் கடிக்க வேண்டும்...!

தினந்தோறும்
ஒரு சிவப்பு எறும்புப் பாதங்களுக்கு
பணிவுடன் நமஸ்கரிக்க வேண்டும்

தித்திப்புத் துணுக்கோ
ஊசிப்போன பண்டமோ
எதிர்பாரா பிரளய கால அசைவிலான
அநாதைச் சவமோ...

வெலவெலக்கும் வாழ்க்கையோ
வளைந்து திரும்பும் கால எல்லையோ
மூக்கில் சுமந்து கொண்டிருக்க வேண்டும்...
எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.