எமக்கும் ஒரு மண்டேலா!
நோர்வே நக்கீரா
கிழக்கில் உதயம்
மேற்கில் மறைவு
இதுவே இயற்கையின் நிறைவு
மானிடம் கொள்ளும் உறவு
இது தெற்குச் சூரியன்
மறைவே இல்லா திராவிடன்.
வைரமும் கறுப்புக் கரிதான்
மண்டேலா எனும் வைரத்தையா
வெட்டிப்பார்க்க முயன்றார்கள்
வெளிறிபோன முகத்துடையோர்.
வைரத்தை வெட்ட வெள்ளை வைரமேது.
நன்நம்பிக்கை முனையின்
தென்துருவநட்சத்திரமே!
உனக்கா சிறை
பேரொளிக்கு சிறையால் வைக்கமுடியுமா சிதை
சிறையிலிருந்தும் சிரித்ததே கறுப்புச்சூரியன்.
உன்சிரிப்பின் சிறப்பில் செத்தது
இல்லை...இல்லை
தற்கொலை செய்தது மேற்கில் சூரியன்
இருந்த கண்டத்தை
இருண்ட இதயம் கொண்டு
உருண்டு உருண்டு தேடி
இருண்ட கண்டம் என்று இயம்பினர்
சூரியன் செத்த தேசத்தினர்
இரத்தம் செத்த முகங்களுடன்
கனிவளங்கள் கொண்ட களங்கள்
வரங்கள் பெற்ற நிலங்கள் - இவை
இருப்பதே ஆபிரிக்கரின் கரங்கள்
கரங்களை கத்தரித்து
சிரங்களை சிறைப்பிடித்து
நிலங்களை பறித்து
மனித உரக்களை உருக்குலைத்த
வெள்ளை வெறியர் முன்
கறுப்புச்சூரியனாய் கருத்தரித்தவர் மண்டேலா.
இருண்ட கண்டத்தின்; கருப்பையின்
இனவெறிச் சுவர்களை எட்டி உதைத்தது
நிறவெறிச் சிறைதகர்த்த சூரியன்
தான்மீட்ட தன்மண்ணில்
தானாக சென்று உறங்கிக் கொண்டது –ஆனால்
உணர்வுகள் அல்லவா உயிர்த்துக் கொள்கின்றன
கல்லென்று சொல்லி
சிறையுள் எறிந்த கறுப்பு வைரம்
தன்னைத்தானே பட்டை தீட்டி
வைரமானவர் மண்டேலா மாமனிதர்
தன்னைத்தானே தன்மண்ணில்
விதையாக்கிக் கொண்டார்.
அன்னியனாலே சொந்தமண்ணில்; சிறை
அன்று மனிதநேயத்துக்கு வந்தது கறை
மனிதத்தை மீட்டு மண்டேலாவெனும் கொடை
இனியும் தோன்றுமா வானில் இன்னுமொரு பிறை
குளிர்நிலவாய் சூரியனைக் கண்டதுண்டா?
கருத்துக்களால் கருக்கொண்ட கார்மேகம்
வெள்ளையாய் இருந்ததுண்டா?
இருபத்தி ஏழுவருடங்கள்
இருண்ட சிறையில் இருந்து கொண்டே
இருண்ட கண்டத்துக்கு ஒளிதந்தது
வைரமனதுடை மண்டெலா எனும் கறுப்புச் சூரியன்
வெளுத்த முடியில் ஒரு வெள்ளிலவு அடங்கிவிட்டது
கறுப்புச் சூரியன் கடசியாக ஓய்வெடுத்துக் கொண்டது
தீட்டிய வைரம் சிதறிச் சென்ற சுதந்திரம் ஒளிச்சிதறல்
மனிதநெஞ்சங்களில் மனிதவிடுதலையாக நிமிர்ந்து நிற்கிறது
தெற்குவானத்தில் ஒரு தேசபிதா
தீட்டுப்படாத கருங்கல்லை
தீண்டாமை கொண்டு தீண்டித்தீண்டியே தீயாக்கி
வைரமாக்கிய வெள்ளையரே
தீயினால் தீண்டப்பட்டுப் பொசுங்கினார்கள்.
எரிந்தது இதயங்களானாலும்
புரிந்தது சுதந்திரமல்லவா
சுதந்திரத்தைச் சுவீகரித்துத்தந்த கறுப்புச்சூரியனே!
உம்மைப்போல் நேர்மையான நேசிப்புடைய ஒரு வைரம்
எம்மினத்தில் தோன்றியிருந்தால்;
இன்று நாமும் உனக்காக
சுதந்திரமாக அழுதிருப்போம்
எம்கண்ணீருக்காக் காவல் இருக்கிறதே
இலங்கை அரசும் இராணுவமும்.
அடக்கித்தான் அழுகிறோம்
கண்ணீருக்கு அணைகட்டினும்
உப்பளமாகி விடுகிறதே தமிழர்கள் எம்முகம்கள்.
nackeera@gmail.com
|