புத்தாண்டு வாழ்த்துக்கள்
சக்தி
சக்திதாசன்
வருடமொன்று ஓடி மறைந்ததும்
விரைவாய் ஒன்று வந்து புகுந்ததும்
விளைவாய் வாழ்வின் வேகத்தை
விந்தையாய் எமக்கு காட்டிடுதே !
சிந்திய கண்ணீர்த் துளிகள் எல்லாம்
முந்திய வினைகள் என்றிட்டே நாம்
பிந்திய காலங்கள் தம்மையே வென்று
படைத்திடுவோம் சரித்திரம் தனை
அவசரம் அவசரமாய் ஓடிடும் இவ்
அகவைகள் தம்மின் கோலங்க|ள்
அகிலத்தில் இயற்கையின் நியதி
அனைவர்க்கும் பொதுவான நீதி
இல்லையென்றிருப்போர் காலத்தால்
இருப்போர் என்றே ஆகிடும் கோலம்
இருப்பதைப் பகிர்ந்திடும் எண்ணம்
இல்லை என்றாகிடும் வேஷம்
நினைத்ததை மறப்பவர் எத்தனையோ
மறந்ததை நினைப்பவரும் அத்தனையே
நினைப்பதும் மறப்பதும் நித்திய நிகழ்வு
நிஜத்தினை மறைப்பது எத்தகை உணர்வு ?
தந்தையை இழந்தேன் அன்னையை இழந்தேன்
தரணியில் பெருந்தகை செல்வத்தை இழந்தேன்
தவழ்ந்திடும் காலத்தின் திரைகள் வாழ்வில்
தாமாக விழுந்திடும் வேளைகளோ ?
காலத்தால் விளைந்திடும் நிகழ்வுகளை
கவிதையாய் நானிங்கு கோர்த்தது
ஞாலத்தில் என் அன்பு நெஞ்சங்கள்
ஞாபகம் கொண்டிட வேண்டியதாலே
மறைந்த ஆண்டோடு மறையட்டும்
மனதில் வாழும் வேதனைகள் - தோழரே
பிறக்கும் ஆண்டோடு பூக்கட்டும் புதிதாய்
பொற்காலம் அனைவரின் வாழ்விலும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய என் சொந்தங்கள் அனைத்திற்கும்
தமிழன்னை ஈந்திடுவாள் நல்வாழ்வை
தவறாமல் பெற்றிடுக திருப்தியான வாழ்க்கை
ssakthi@btinternet.com
|