கொலையுண்ட கடவுள்

கோ.நாதன 

கல்லேறிய கோவில் சின்ன குத்து
விளக்கு திரி வெளிச்சத்தில்
ஒன்றிய பெருங் கூட்டமொன்று
அச்சம் கொணர்ந்த இரவுகளை கிழிந்திருந்த
போர்வைக்குள் உடல் சாத்தி துயர்
வெப்பக் தகிப்பில்.மண்டியிட்ட காலவெளி.

எஞ்சியவர்களும் மூண்ட
காட்டின் அரவங்களில் இருள்வெளி
மெழுகு ஒளி கொட்டிய நிழல்
மரங்களிருந்து பறவை ஒலித்த சின்ன
குரல் அதிர்வை
பெருத்த வெடிப்பின் உடைவை கணித்து
சருகில் நடந்து செல்லுகின்ற
விலங்குகளில் கால்களிருந்து விழும்
சப்தமும் திடுக்கிற்று தெய்வங்களை கரம்
ஓங்கி கூப்பி வேண்டி பிரார்த்திக்கின்றன.

இரசாயன எரி நெருப்பிலிருந்து மிக கனத்து
பற்றி எரிகிறது எனது பெருநிலம்
எரிந்த வாகனங்களின்
கறள் சாம்பலாகிப் போன வாழ்வு
எல்லா மீள்தலுக்கான
நம்பிக்கைகளும் இருப்பிடமற்று விரிகிறது
விளைநிலம் துளிர்த்த பயிர்களும்,
துண்டாப்பட்ட கழுத்திலிருந்து
கொப்பளித்த இரத்தக் கழனி
புல்லிதழ் இரகசியமும், பரவிய
செய்தி காலம் அழுது வடித்த கண்ணீராற்று...

முள்ளிவாய்க்கால் எங்கும் கவிழ்ந்த
அபல பெருவலி காயங்களாலும்இ
பிண வாசங்களாலும் தவிக்கிறது.
கொலையுண்ட கடவுளின் காலடித் தடம் தேடி
சிவனொளி பாத மலை உச்சிக்கு
ஒடுங்கிய ஒற்றைப் பாதை
நெடுந்தூரத்தை நெரிசல்கள் பெண்களின்
வியர்வை நெடி உள்ளாடைகளிடையே
ஆண்குறிகளை உந்துதுலால் நெரிக்கின்றனர்..

சோர்விழந்திருக்கும் உள்ளாத்மா
எனது சுயத்தின் மூலத்தை எல்லையற்ற
வானவெளியெங்கும்
அழிவின் இழப்புகளை தேடியலைகிறது .

 

naathanaris@gmail.com