இணையத்தில்   இன்பத்தமிழ்

                                         
பாவலர் கருமலைத்தமிழாழன்


 

மயில்பொறியை   வானத்தில்   பறக்க   வைத்தோம்                    

          மணிபல்லத்   தீவிற்குப்   பறந்து   சென்றோம்

குயில்மொழியாள்   கண்ணகியை   அழைத்துச்   செல்லக்

          குன்றுக்கு   வானஊர்தி   வந்த   தென்றே

உயில்போன்று   நம்முன்னோர்   எழுதி   வைத்த

          உண்மைகளை   அறிவியலின்   அற்பு  தத்தை

பயில்கின்ற   காப்பியத்தில்   படித்த   தெல்லாம்

          பார்தன்னில்   நனவாகக்   காணு  கின்றோம் !

 

அணுப்பிளந்த    செய்திதனை   ஔவை   சொன்னால்

          அவிழ்த்துவிட்ட    புளுகுமூட்டை   என்று   ரைத்தார்

அணுக்குண்டைப்    பொக்ரானில்    வெடித்த   போதோ

          அருந்தமிழன்   அறிவுதனைப்   போற்றி   நின்றார் !

முணுமுணுத்தார்   அம்புமுனை   நெருப்பைக்   கக்கி

          முன்னேறிச்   சென்றதினைப்   பொய்யே   என்றார்

முணுமுணுத்த   வாய்பிளந்தே   இசுகட்   என்று

          முகிழ்த்தஏவு    கணைகண்டு   வியப்பி   லாழ்ந்தார் !

 

வான்மீதில்   தெரிகின்ற   மீன்கள்  தம்மின்

          வகைசொல்லி;   ஒளிர்கின்ற   திசையைக்   கொண்டே

தேன்தமிழில்   கோள்கள்தம்   அசைவைச்   சொல்லித்

          தெளிவான   ஞானத்தால்   கதிரைச்   சுற்றி

நீள்வட்டப்   பால்வீதி   உள்ள   தென்றும்

          நிற்காமல்   சுற்றுகின்ற   விஞ்ஞா   னத்தை

ஆன்மீகப்    போர்வையிலே    சொன்ன    தாலே

          அறிவியல்தான்   தமிழ்மொழியில்   இல்லை    யென்றார் !

 

தரைதன்னில்   நாளுமெங்கோ   நடக்கும்   எல்லாத்

          தகவலினைக்   காட்சிகளாய்   வீட்டிற்   குள்ளே

திரைதன்னில்   காண்பதனை   அறிவிய   லென்றே

          திளைக்கின்றார்   தொலைக்காட்சி   முன்ன  மர்ந்தே

அறைதன்னில்   அமர்ந்தபடி   பார   தப்போர்

          அன்றாட   நிகழ்ச்சிகளை   நடக்கும்   போதே

திரைதன்னில்   காண்பதுபோல்   சொன்னா   ரென்றால்

          தீட்டிவைத்த   பொய்யென்றே   இழிவு   செய்தார் !

 

பாலுக்குள்  நெய்பதுங்கி   உள்ள   தன்மை

          பார்வைக்குத்   தெரியவில்லை   என்ப   தாலே

பாலுக்குள்   உள்ளநெய்யும்   பொய்யாய்ப்   போமோ

          பாட்டிற்குள்  அறிவியலின்   கருத்தை  யெல்லாம்

மேலுக்குச்    சொல்லவில்லை   என்ப   தாலே

          மேடையிலே   இல்லையென்று   முழங்க   லாமா

காலங்கள்   வினைத்தொகையில்   உள்ள   போலே

          கனித்தமிழில்   அறிவியலும்   உள்ள  துண்மை !

 

பொறியிலின்   நுணுக்கத்தைப்   பாட்டிற்   குள்ளே

          போற்றியதைத்   தெரியாமல்   மறைத்து   வைத்தோம்

குறியீட்டில்    மருத்துவத்தைச்   சித்த   ரெல்லாம்

          குறித்தளிக்கப்   புதையலெனப்   புதைத்து   வைத்தோம்

அறிவியலை   உவமைகளாய்   அடுக்கி   வைக்க

          அழகுநயம்   எனச்சொல்லி   மூடி   வைத்தோம்

தெரிவிக்க   மறுத்ததாலே   கையில்   வைத்தும்

          தெரியாமல்   மூடரெனத்    தாழு   கின்றோம் !

 

 கொல்லையிலே   பூத்துளது    என்ற  போதும்

          கொஞ்சுமெழில்    நறுமணத்தை   அறிவ   தற்கே

முல்லைக்கும்   விளம்பரங்கள்   செய்யும்   காலம்

          முத்தமிழில்    உள்ளதென   நமக்கு   நாமே

சொல்லுவதால்   யாறறிந்தார்   உலக   மெல்லாம்

          சொல்லுகின்ற   வகையினுக்கே   வழியென்   செய்தோம்

வெல்லுகின்ற   இலக்கியத்துக்   கருத்தை   யெல்லாம்

வெளிச்சத்தில்   கடைவிரித்தே   கூவ  வேண்டும் !

 
கணியனவன்   யாதும்ஊர்   என்று   ரைத்த
          கருத்தின்று   கணினிவழி   வந்த  திங்கே

தனித்தீவாய்    வாழ்ந்துவந்த   மக்க   ளெல்லாம்

          தமராக   இணைகின்றார்   இணையத்   தாலே

இனிநம்மின்   வீட்டிற்குள்   இருந்த  வாறே

          இத்தரையின்   நிகழ்ச்சிகளைப்   பார்ப்ப  தோடு

தனித்தனியாய்    தம்மொழியில்   பேசு  தற்கும்

          தகவல்கள்   பெறுதற்கும்   வாய்ப்பைப்   பெற்றோம் !

 

சொற்பொழிவு    கேட்பதற்கும்   அறிஞ   ரோடு

          சொல்லாடல்   நிகழ்த்துதற்கும்   கவிஞர்   தம்மின்

நற்கவிதை    அவர்சொல்லத்   துய்ப்ப   தற்கும்

          நாளிதழின்    செய்திகளை    அறிவ   தற்கும்

பல்வேறு   விளையாட்டில்   திளைப்ப   தற்கும்

          பலநாட்டுப்   பொருட்களினை    வாங்கு   தற்கும்

அற்புதமாய்   நமக்குவாய்த்த   இணையம்   இந்த

          அகிலத்தை   வீட்டிற்குள்   அடைத்த   தின்று !

 

 அறிவியலுக்   கேற்றமொழி   அல்ல   வென்னும்

          அறிவிலிகள்   கூற்றையெல்லாம்   பொய்யா   யாக்கி

செறிவான   கணிப்பொறியின்   மொழியா   யாகி

          செம்மையான   குறியீட்டின்   எழுத்து   மாகி

அறிகின்ற   விசைப்பலகை    பொதுவா   யாகி

          அறிஞரெல்லாம்   போற்றுகின்ற   சொல்தொ   குப்பும்

நெறியான   மென்பொருளின்  தளம   மைந்தே

          நிகரில்லா    இணையமொழி    ஆன   தின்று !

 

தொல்காப்பி    யர்மொழியை  வள்ளு  வர்தம்

          தொல்குறளை    கம்பர்சொல்   கவிந  யத்தை

உள்ளத்தை   உருக்குகின்ற   தேவா   ரத்தை

          உரிமைப்பா   பாரதியை   தாசன்  தம்மை

எல்லைக்குள்   இல்லாமல்   ஞால   மெல்லாம்

          எம்மொழியில்   படிப்பதற்கும்   இணைய   மென்னும்

நல்வலையுள்   வளங்களுடன்   நுழைந்த   தாலே

          நற்றமிழோ    உலகமொழி   ஆன   தின்று !

 

பிறமொழியின்   அறிவெல்லாம்   இணையத்   தாலே

          பிறக்குமினி   தமிழினிலே!   உலகந்   தன்னில்

சிறகடிக்கும்   புதுமையெல்லாம்   ஒருநொ   டிக்குள்

          சிறப்பாகத்   தமிழினிலும்   பூக்கு   மின்று

வரவாகித்    தமிழுக்கே   அணியைச்   சேர்க்கும்

          வளம்பெற்ற   மொழியாகத்   தமிழு   மோங்கி

கரம்பிடித்து    நமையழைத்தே    உலக   ரங்கின்

          கண்களிலே   தமிழகத்தை   உயர்த்தி   வைக்கும் !