வருமோ  இப்புதிய   உலகு

பாவலர் கருமலைத்தமிழாழன்

பூத்திருக்கும்   பூஞ்செடிகள் !   பச்சைப்   பட்டைப்

          போர்த்திருக்கும்   மலைச்சாரல் !   வானை   முட்டக்

காத்திருக்கும்   பசும்மரங்கள் !   அடர்ந்த   காடு

          கவின்கொஞ்சும்    தோப்புகளும்   சோலை   சேர்ந்து

கூத்திசைக்கும்   இயற்கைவளம்   பூமி   யெங்கும்

          கும்மாளம்   போட்டபடி    கொஞ்சி   யாடும்

மாத்தமிழை   வளர்க்கின்ற    தமிழர்   போலே

          மக்களெல்லாம்    மரங்களினை   வளர்ப்பா   ரங்கே !

 

ஆற்றினிலே    ஆலைகளின்   கழிவு   சேர்த்து

          ஆகாய   வெளியினிலும்    மாசு   சேர்த்து

ஊற்றினிலும்   தூய்மையிலா   நீராய்   மாற்றும்

          உன்மத்தர்    செயல்களெல்லாம்   முடிந்து   போகக்

காற்றுவெளி   தூய்மையாகிக்   குடிக்கும்   நீரும்

கலப்படமே   இல்லாமல்   கிடைக்க   மங்கே

நேற்றுவரை   இருந்தநிலை   மாறி  வாழ்வில்

          நோய்நொடிகள்   இல்லாமல்   இருப்பா  ரங்கே !

 

பட்டங்கள்   பலபெற்றும்   பணியே   இன்றிப்

          பரிதவித்தே   ஏங்குகின்ற   இளைஞர்   கூட்டம்

வெட்டியாகச்   சுற்றுகின்ற    நிலைமை   மாறி

          வெறுங்கையின்   சக்திதனைத்   திறன்கள்   தம்மைத்

திட்டமிட்டுப்  பயன்படுத்த   வேலை  யின்றித்

          திண்டாடல்   பழங்கதையாய்   மாறிப்   போகும்

கட்டாயம்   பணிகிடைக்கும்   வகையில்   கல்வி

          கற்பிக்கும்   புதியமுறை   இருக்கு  மங்கே !

  

அரசாங்க   அலுவலர்கள்   எல்லாம்   லஞ்ச

          அரிச்சுவடி   அறியாத   நேர்மை   யாளர்

வரவுதனைப்   பார்க்காமல்   கடமை   செய்து

          வந்தகோப்பை   விரைவாக   முடிக்கும்  பண்பர்

அரவணைத்து   மக்கள்தம்   குறைகள்   கேட்டு

          அன்போடு   சரியான    பதிலு   ரைப்பர்

அறவழியே   தம்வழியாய்   மக்க   ளெல்லாம்

          அனுதினமும்   நடந்திடுவர்   நன்றாய்   அங்கே !

 

வாக்களிக்கத்     தொகைகொடுக்கும்   வழக்க   மில்லை

          வன்முறைகள்   மிரட்டல்கள்   சிறிது   மில்லை

தாக்குகின்ற   பேச்சில்லை   மேடை   யில்லை

          தனைப்பற்றிச்   சுவரொட்டி   எழுத்து  மில்லை

ஆக்கத்தை   அளிப்போரைத்   தேர்ந்தெ   டுக்கும்

          அமைதியான  தேர்தலாக   நடக்கு   மங்கே

வாக்களிப்போர்   யாருக்கும்   அஞ்சி  டாமல்

          வாக்களித்தே   தேர்தெடுப்பர்   முறையாய்   அங்கே !

 

ஆட்சியிலே    ஊழலில்லை   ஆட்சி   யாளர்

          அதிகார   ஆர்ப்பாட்டம்     செய்வ   தில்லை

காட்சிக்கே   எளியவராய்   அமைச்ச  ரெல்லாம்

          கால்நடந்து  மக்கள்குறை    தீர்க்கின்   றார்கள்

தீட்டுகின்ற   திட்டத்தில்   சுரண்ட   லின்றித்

          தினையளவும்   குறையாமல்    சுணக்க   மின்றி

வாட்டுகின்ற   துயர்களைந்து   நாளும்   மக்கள்

          வாழ்க்கையினை   மேப்படுத்த   உழைப்பா   ரங்கே !

 

 உழைக்கின்ற   வர்க்கமென்றும்    உழைப்பைத்   தின்று

          உடல்கொழிக்கும்   வர்க்கமென்றும்     இருந்த   தெல்லாம்

தழைக்கின்ற   புதுஉலகில்    காண   வில்லை

          தனியுடைமை   பேச்சுக்கும்    இடமு   மில்லை

உழைப்பவரை    உயர்ந்தவராய்   மதிப்ப   தாலே

          உழைக்காமல்    இருப்பவர்கள்    யாரு   மில்லை

உழைப்பவர்க்கே   தொழிற்சாலை   சொந்த   மாகி

          உரிமையெல்லாம்   பொதுவுடைமை   ஆன   தங்கே !

 

சாதிகளின்   பிரிவுயில்லை   உயர்வு   தாழ்வு

          சண்டையில்லை   சாத்திரத்தின்   பேத   மில்லை

ஆதிக்க   மதங்களில்லை   வணங்கு   கின்ற

          ஆண்டவனில்   முரண்பட்ட   கருத்து  மில்லை

வாதித்து   வருத்தத்தை   வளர்ப்போ   ரில்லை

          வளரன்பே   இறையருளின்    வழியா    மென்று

போதிக்கும்   அறிவுரையில்   மக்க   ளெல்லாம்

          பொதிந்துமனம்   ஓரினமாய்   வாழ்வா   ரங்கே !

 

பலமொழிகள்   பேசினாலும்   அன்பு   என்னும்

          பாலத்தால்   ஒருங்கிணைந்தே   வாழு   கின்றார்

கலக்கின்ற   கருத்தாலே   மொழிக   ளுக்குள்

          காழ்ப்புகளும்   உயர்வுதாழ்வு    காண்ப   தில்லை

இலக்கியங்கள்   மொழிமாற்றம்   செய்தே   தங்கள்  
                        இலக்கியமாய்ப்    போற்றுகின்றார் !   கணினி   மூலம்   
               பலரிடத்தும்   பலமொழியில்    பேசு   கின்ற
                      பயனாலே   மொழிச்சண்டை   இல்லை  அங்கே !

 

நாடுகளுக்    கிடையெந்த   தடையு   மில்லை

          நாடுசெல்ல   அனுமதியும்   தேவை   யில்லை

நாடுகளுக்    கிடையெந்த    பகையு   மில்லை

          நட்பாலே   உதவுதற்கும்   எல்லை   யில்லை

வாடுகின்றார்   ஒருநாட்டு   மக்க   ளென்றால்

          வளநாடு    கரங்கொடுத்தே   காத்து   நிற்கும்

பாடுபட்ட   பலனெல்லாம்    அனைவ   ருக்கும்

          பகிர்ந்தளித்தே   வாழ்ந்திடுவர்    பொதுமை   என்றே !

 

உயிர்பறிக்கும்    குண்டுகளைச்    செய்வோ   ரில்லை

          உயிர்மாய்த்து   நிலம்பறிக்கும்   போர்க   ளில்லை

உயர்சக்தி   அணுக்குண்டு   அழிவிற்    கின்றி

          உயர்த்துகின்ற   ஆக்கத்தின்   வழிச   மைப்பர்

உயரறிவால்   கண்டிடித   விஞ்ஞா   னத்தை

          உயர்வாழ்வின்   மேன்மைக்குப்  பயனாய்ச்   செய்வர்

அயல்நாட்டை   அச்சுறுத்தும்   இராணு   வத்தின்

          அணிவகுப்பும்   போர்க்கருவி   இல்லை  அங்கே !

 

வான்மீது   எல்லைகளை   வகுக்க   வில்லை

          வாரிதியில்   கோடுகளைப்    போட   வில்லை

ஏன்நுழைந்தாய்   எம்நாட்டு    எல்லைக்   குள்ளே

          என்றெந்த    நாட்டினிலும்   கேட்போ   ரில்லை

தேன்சிந்தும்   மலர்மணத்தைச்    சொந்த    மென்று

          சொல்கின்ற   முட்டாள்கள்    இல்லை   அங்கே

கூன்முதுகில்   இருப்பதன்றி    அறிவு   தன்னில்

          கூன்விழுந்த   குறுமனத்தார்   இல்லை   அங்கே !