இயற்கையைக் காப்போம்
பாவலர்
கருமலைத்தமிழாழன்
முன்னோர்கள் தூய்மையாக வைத்தி
ருந்த
மூச்சிழுக்கும் காற்றினிலே நஞ்சை சேர்த்தோம்
முன்நின்று காற்றிலுள்ள அசுத்தம் நீக்கும்
முதலுதவி மரங்களினை வெட்டிச் சாய்த்தோம்
பொன்கதிரை வடிகட்டி ஒளிய னுப்பும்
பொற்கவச ஓசோனை ஓட்டை செய்தோம்
இன்னும்நாம் தன்னலத்தால் அழித்தல் விட்டே
இயற்கையினைக் காத்தேநம் வாழ்வைக் காப்போம் !
ஆயிரமாம் ஆண்டுகளாய் சேர்த்து வைத்த
அடிநீரைக் குழாய்வழியே காலி செய்தோம்
பாய்மரம்போய் கடல்நீரில் எண்ணெய் குண்டால்
பரிதவிக்க மீன்களினைச் சாக டித்தோம்
தாய்மண்ணில் உரங்களினைப் போட்டுப் போட்டுத்
தரும்விளைச்சல் எனஉறிஞ்சி சக்கை செய்தோம்
சேய்கள்தாம் வாழ்வதற்கே அழித்தல் விட்டே
செழிப்பாக இயற்கையினைக் காத்தே வாழ்வோம் !
அரணாக நமைக்காத்த காட்டை வெற்பை
அறுத்துடைத்தே மழைவளத்தை மலடு செய்தோம்
வரமாகப் பெற்றவயல் தோப்பை வீடாய்
வடிவமைத்து விளைச்சலுக்கு முடிவு செய்தோம்
கரமாக உதவிவந்த ஆற்று நீரில்
கழிவுசேர்த்து நோய்பெருக்கி முடமாய் செய்தோம்
சிரமிழந்த உடலாக ஆகி டாமல்
சீர்இயற்கை தனைக்காத்தே சிறப்பாய் வாழ்வோம் !
|