எழுத்தாணி
ஏந்தும் ஈசல்கள்
மன்னார்
அமுதன்
இதோ
இன்னொரு கிறிஸ்து
மரங்களை மட்டுமல்லாமல்
மனித மனங்களையும் இழைத்து
உணர்வுகளை எழுத
எழுத்தாணி பிடித்து
இறங்கி வருகிறார்
ஊடக வெளிச்சத்தால்
ஊழல்களைப் படம் பிடித்து
உண்மைகளை உளறிக்கொட்ட முன்
இவரையும் அறைந்து விடுங்கள்
சிலுவையில்
எங்கே சென்றாய்
கோடாரிக் காம்பே?
யூதா ! எங்கே சென்றாய்
மனிதம் கொன்று
மரணம் தின்னும் உனக்கு
புனிதர் கொல்லவோ
புகட்ட வேண்டும்
யுகம் யுகமாய்த்
தொடரும் காட்டிக் கொடுப்புகளும்
சிலுவை மரணங்களும்
உனக்கும் அவர்க்கும்
எழுதப்படா ஒப்பந்தம் தானே
காட்டிக் கொடுத்துவிடு
இவருக்கான
வாழ்வும் சாவும்
எழுத்துக்களில்
எழுதப்பட்டுள்ளது
எழுத்துக்களால்
எழுதப்பட்டுள்ளது
மரணம் நிகழும்
வழிகள் தான் வேறு
சேருமிடமென்னவோ
கல்வாரி தானே
இவையறிந்தும்
நெடும் பயணம் செய்யும்
நாரைகளாய்க்
களைப்பின்றி
பயணிக்கும் எழுத்துக்களோடு...
மரணத்தை நோக்கி
விளிநிலையினன்
விரலிடுக்கில்
மாட்டித் தொங்கும்
மூட்டையைப் போலவே
எப்போதும் சுமக்கும்
ஆயிரம் எண்ண முட்டைகள்
புரட்சிகளின் மருட்சியால்
காற்றைக் கிழித்து
வரும் சிறுரவை
அவர் நெஞ்சுக்கூட்டின்
எழும்புகளிடையே
சிறைப்படும்
பெருவலியோடு
உயிர் பிரியும்
அக்காட்சியும்
கண்முன்னே விரியும்
சித்தெறும்புகள்
திடுமென முளைக்கும்
செங்குருதி சுவைக்கும்
திகட்டவும் கலையும்
நேரெதிராய் முட்டி
உணர்கொம்புகளால்
கவிபாடி விலகும்
திரும்பவும் கூடும்
இறக்கை முளைத்து
ஈசல்களாய் எழுத்தாணி
ஏந்திப் பறக்கும்...
மீண்டும் ரவைகளைத் தேடி
amujo1984@gmail.com
|