செத்துமடியாதே செய்யத் துணி..

வித்யாசாகர்




றவைகள் பறக்கின்றன
தூரத்தை உடைக்கின்றன..
பூக்கள் மலர்கின்றன
முட்களையும் சகிக்கின்றன..

மரங்கள் துளிர்க்கின்றன
மலர்களையே உதிர்க்கின்றன..
மணல்வெளி விரிகிறது
மனிதத்தையும் கொடுக்கிறது..

மனிதன் பிறக்கிறான்
மாண்டப்பின்பும் தவிக்கிறான்
உலகை அழிக்கிறான்
ஒரு சாதியில் பிரிக்கிறான்

ஐயோ சாமி என்கிறான்
சாமியின் சூழ்ச்சுமம் மறக்கிறான்
அந்தோ பாவம் என்கிறான்
அத்தனைப் பாவமும் அவனே செய்கிறான்..

எல்லாம் நானே என்கிறான்
எங்கும் இல்லாமல் போகிறான்
இது தான் உலகம் என்கிறான்
அதுவாகவே ஆகிப்போகிறான்..

அணுவிலும் ஆயிரம் பிரிக்கிறான்
அலைகடல் ஆழம் அளக்கிறான்..
அகிலமிதோ ஒரு புள்ளி என்கிறான்
புள்ளிப் புள்ளியாய் கோள்கள் கடக்கிறான்..

எதெல்லாம் செய்தானோ
அதனாலேயே அழிகிறான் மனிதன்,
செய்யமறந்ததை துளி எண்ணவே
மறுக்கிறான்..

இனி –

மாற்றத்தில் மார்பு விரிய
மாறும் உலகை கண்டு ரசிப்போம்
நல்லதே எங்கும் உண்டென்று
தீயதையும் மெல்ல ஒழிப்போம்..

உழைப்பதில் கண்ணியம் காட்டி
உறவிலே உண்மையை விதைப்போம்
நல்லதை எண்ணிக் கடப்பின்
நானிலமும் நமதே யாகும்!!