பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்..

வித்யாசாகர்



1
ச்சீ
உயிர்சுடுமெனில்
விட்டுவிடுங்கள்
மதத்தை..
---------------------------------------------------------------------

2
அப்படி என்ன
சாமி வேண்டிக்கிடக்கு
மனிதர்களைக்
கொன்றப்பின்..
-------------------------

3
சுடாதே
சுடாதே
நிறுத்து
மதத்திற்கென சுடுவாயெனில்
உன்னைச் சுட்டுக் கொல்!
-------------------------

4
யாரடா
யாரையடா வெட்டுகிறாய்
நீ வெட்டுவது
உன்னைப்போலவே மதத்தை நம்பும்
இன்னொரு
அப்பாவியை தானே.. (?)
-------------------------
5
அவனுடைய மதத்தை விட்டு
அவனை வெட்டினால்
நீயும் கொலைகாரனே..
------------------------------

6
வாத்திப் பையன்
மக்கு என்பார்கள்,
புத்தரின் பக்தர்களில்
சிலரும்
அதற்கிங்கேச் சான்று..
--------------------------------

7
பார்த்தியா
மதம் என்றதும்
அதும் உன் மதம் என்றதும்
மனிதர்களையே மாய்க்கிறாய்

இது தான் நீ, மனிதா

உன்னை சுனாமி கொன்றாலென்ன ?
பூகம்பம் கொன்றாலென்ன ?

ஒருவேளை
அவைகள் வராமல் விட்டுவிட்டாலும்
நீ போதும் உன்னினத்தைக்
கொன்று குவிப்பதற்கு..
-------------------------------

8
மதத்தை மதிப்பவன்
தானே மதத்திற்குப் போராடவேண்டும் ?

நீ ஏன்?
----------------------------

9
எல்லா உயிர்களிடத்தும்
அன்பு செலுத்தவேண்டும்
ஆனால்
இஸ்லாமியரை மட்டும்
கொன்றுகுவிக்க வேண்டும்

என்று கனவில் வந்து
கட்டளையிட்டது யார்..?
-------------------------
10
நீ துரத்துவது
வெட்டுவது
கொல்லுவது
குழந்தைகளையும் பெண்களையுமா.,

ரத்தக்கறை
உனது காவித்துணியை
நிறம் கறுக்கச் செய்கிறது பார்..
--------------------------
11
இரக்கம் சுரக்காத மனசு
எந்த சாமிக்கு குடியாகும்

ஓடி ஓடி
அடிக்கிறாயே
எந்த மதமுன்னை மன்னிக்கும்?

புத்த கொடிக்கு
தொப்புள் கொடியறுத்துக் கட்டி
எந்த மண்ணில்
மனிதரென உன்னை மெச்சுக் கொள்வாய்?

விரட்ட விரட்ட
ஓடுகிறார்கள் என்று நினைக்காதே
விரட்டி விரட்டியடிக்கும்
காலத்தையும் இயற்க்கை வைத்திருகிறது

கை உடைக்கலாம்
கால்களை உடைக்கலாம்
உலக
கண்களை மறைக்க இயலாது?

பெரியவரை அடிப்பதும்
சிறியோரை விரட்டுவதும்
பெண்களைக் கொள்வதும்

மதத்திற்கு என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன் மதத்தால் என்பதே சரி..
---------------------------------------------------------------------

12
ரத்தத்தில்
எங்கிருக்கு வெவ்வேறு நிறம்

மனிதரில்
எங்கு பிறந்தது
வேறு வேறு நிறம் ?

உள்ளுக்குள்
இணைந்திருந்தும்
வெளியே சதைகளை ஏன்
நீ வேறு
நான் வேறாக அறுத்துக் கொள்கிறாய்..?

யோசித்துப்பார்
நல்லதை செய்தாய், சரி
உனக்குக் கெட்டதையும்
நீதான் செய்கிறாய்..
------------------------

13
உனக்கு பிடித்ததை
புரிந்ததை
நீ செய்கையில்

அவனுக்கு பிடித்ததை
புரிந்ததைச் செய்வதில்
அவனெப்படி
எதிரியானான்?

அவரவர் நம்பிக்கையை
அவரவர் சுமந்துப் போங்கள்

அனைவருக்காகவும்
ஒன்றாகவே திளைத்திருக்கிறது
பரந்த வானமெங்கும்
பூமிதோறும்
இறைசக்தி..
-------------------------

14
இருக்கோ
இல்லையோ
இருக்கவேண்டியவன்
முதலில் மனிதன் இல்லையா ?

அவனில்லாத இடத்தில்
நீ எதை போட்டு நட்டு
என்ன பயன் ?

ஒருவேளை நட்டுத்தான்
பாரேன்
ஒரு பிணத்தின் மீது உனது
மதத்தின் கடவுளை
அதற்கு வாயிருந்தால் - உன் முகத்தில்
காரி உமிழும்..

கடவுள் என்பது
இப்போதைக்கு
அந்த காரி உமிழ்தலின் வெளிப்பாடாக
இருப்பது
நம் இப்போதைய
வாழ்தலின்
அசிங்கமான அடையாளம்.

இல்லையென்றுச் சொல்வோர்
ஒருவர் சென்று
ஒரு உயிரையேனும் பர்மாவிலிருந்தோ
பர்மாப் போன்ற
மதம்பிடித்த மயானத்திலிருந்தோ - காப்பாற்றிவிட்டு
வாருங்கள்,

மதம் நம்பும்
சாமிகளின் ஆசி
உங்களுக்கும் கிடைக்கக் கடவதாக..
------------------------
15
பர்மாவில் கொலை
ஸ்ரீலங்காவில் கொலை
காஸ்மீரில் கொலை
பாலஸ்தீனில் கொலை
குஜராத்தில் கொலை
முஸ்லீம் கொலை
இந்து கொலை
கிருஸ்துவர் கொலை
கொலை
கொலை
கொலை; எத்தனை கொலை செய்து
என்றைக்கு நாம் நிரூபிக்கப் போகிறோம்
இதுதானென்று - நாம் முடிவாக நம்பும்
நம் கடவுளை..?

நிரூபிக்கும் நாளன்று
நம் கோவில்கள்
நம் மத அடையாளங்கள் இருக்கும்
சாமிகளுக்கு வழிபாடு செய்ய
நாமிருப்போமா?

இருக்கவேண்டுமெனில்
சாமிகளை
மனிதரை மிதித்துக்கொண்டு
தேடாதீர்கள்;

மனிதருக்குள்
இருக்கும் தெய்வீகத்தை உணருங்கள்..

மனிதரைக் காட்டிலும்
அன்புசெய்ய
வேறோர் புனிதமில்லை..